ஆக்கிரமிப்பு கடைகளால் திணறும் திருப்பூர் பழைய பஸ்நிலையம்


ஆக்கிரமிப்பு கடைகளால் திணறும் திருப்பூர் பழைய பஸ்நிலையம்
x
தினத்தந்தி 1 March 2017 4:15 AM IST (Updated: 1 March 2017 4:50 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் பழைய பஸ் நிலையத்துக்குள் சாலை மற்றும் நடை பாதைகளை ஆக்கிரமித்து மீண்டும் கடைகள் அமைப்பது தொடர்வதால் பஸ் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், பயணிகளும் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

திருப்பூர் பழைய பஸ்நிலையம்

திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் ஒட்டன்சத்திரம், கோபி, ஈரோடு, சேலம், கோவை, பொள்ளாச்சி செல்லும் புறநகர் பஸ்கள் மற்றும் பல்லடம், ஊத்துக்குளி, உடுமலை, அவினாசி, மங்கலம், காங்கேயம் மார்க்கமாக செல்லும் டவுன் பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் என்று தினமும் 1,700 பஸ்கள் வந்து செல்கின்றன. தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக திருப்பூர் உள்ளதால் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் தினமும் பழைய பஸ் நிலையம் வந்து செல்கின்றனர்.

இங்கு பஸ்கள் நிறுத்த 4 தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர புதுமார்க்கெட் வீதி செல்லும் பகுதியில் நிழற்குடையும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பயணிகள் அமர்வதற்கு வசதியாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இருக்கைகளை ஆக்கிரமித்து பழக்கடை மற்றும் கைக்கடிகாரக்கடை வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனர். இதனால் வெளியூரிலிருந்து வரும் பயணிகள் அமர்வதற்கு இடமின்றி கால்கடுக்க நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

ஆக்கிரமிப்பு

அத்துடன், புதுமார்க்கெட் வீதி செல்லும் வாசல் பகுதியில் உள்ள நிழற்குடை முன் பழ வியாபாரம், செருப்பு வியாபாரம், கம்பங்கூழ், குளிர்பானம் போன்ற வியாபாரம் செய்யும் தள்ளுவண்டி கடைக்காரர்களும் பஸ்கள் வந்து செல்லும் சாலைகளை ஆக்கிரமித்து தள்ளுவண்டிகளை அமைத்துள்ளதால் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதுதவிர பஸ் நிலையத்தில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள கடைகளை வாடகைக்கு எடுத்துள்ளவர்கள் பயணிகள் நடப்பதற்கு அமைக்கப்பட்டு உள்ள நடைபாதைகளை ஆக்கிரமித்து பேன்சி பொருட்கள், சூட்கேஸ், பைகள், ஆடைகள் உள்ளிட்டவைகளை மாட்டி வைத்துள்ளதால் பயணிகள் நடந்து செல்ல வழியின்றி சிரமம் அடைந்து வருகின்றனர்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மாநகராட்சி அதிகாரிகள் பழைய பஸ் நிலையத்தில் நடைபாதைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்தியதுடன், தொடர்ந்து கடை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் தற்போது மீண்டும் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துக்கும், பயணிகளுக்கும் ஏற்படும் பாதிப்புகளை கருதி, பழைய பஸ்நிலையத்தில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்துவதுடன், தொடர்ந்து ஆக்கிரமிப்பு கடைகள் பெருகாத வகையில் கண்காணிப்பு பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story