தேனி வனப்பகுதியில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்


தேனி வனப்பகுதியில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்
x
தினத்தந்தி 1 March 2017 4:15 AM IST (Updated: 1 March 2017 4:54 AM IST)
t-max-icont-min-icon

தேனி வனப்பகுதியில் 50–க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டு உள்ளன. மேலும் ஏராளமான மரங்களை கடத்த அடிப்பாகம் வெட்டப்பட்ட நிலையில் உள்ளன.

சந்தன மரங்கள் கடத்தல்

தேனி மாவட்டம் வனப்பகுதிகள் அதிகம் கொண்ட மாவட்டமாக உள்ளது. தேனி நகரை சுற்றிலும் மலைப் பகுதிகளே உள்ளன. இதில் வீரப்ப அய்யனார் கோவில் மலைப்பகுதியில் அதிக அளவில் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. பிரமாண்டமான மூங்கில் காடுகள் உள்ளன. மேலும் சந்தன மரம் உள்பட பல்வேறு விலை உயர்ந்த மரங்களும் இங்கு உள்ளன.

சமீப காலமாக இந்த வனப்பகுதியில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. தற்போது, வீரப்ப அய்யனார் கோவில் அருகில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் 50–க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு உள்ளன. இந்த வனப்பகுதியில் பல இடங்களில் மரங்கள் அடிப்பாகத்தோடு வெட்டப்பட்ட நிலையில் உள்ளது. மரங்கள் வெட்டப்பட்டு கிளைகள் ஆங்காங்கே கிடக்கின்றன.

மேலும் கடத்த திட்டம்

இந்த கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது தெரியவில்லை என்று அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும், நூற்றுக்கணக்கான சந்தன மரங்களின் அடிப்பாகம் வெட்டப்பட்டு உள்ளன. இவ்வாறு அடிப்பாகத்தை வெட்டுவது என்பது, அந்த மரத்தை பட்டுப் போக செய்வதுடன், மரத்தின் பால் மரக்கட்டைக்குள்ளேயே உறைந்து, சந்தன மரத்தின் வாசம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக என்று கூறப்படுகிறது. எனவே மேலும் நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டிக் கடத்த மர்ம நபர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் மாரிமுத்துவிடம் கேட்ட போது, ‘வீரப்ப அய்யனார் கோவில் மலைப் பகுதியில் பிரமாண்டமான சந்தன மரங்கள் இல்லை. முதிர்ச்சி அடையாத மரங்கள் தான் உள்ளன. இப்பகுதியில் சந்தன மரங்கள் வெட்டப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். எவ்வளவு மரங்கள் வெட்டப்பட்டன என்பதை கண்டறியப்படும். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

1 More update

Next Story