குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் தகவல்


குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 28 Feb 2017 10:45 PM GMT (Updated: 28 Feb 2017 11:25 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர்,

ஆலோசனை கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வறட்சி பணிகள் மற்றும் குடிநீர் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் நிர்மல்ராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்துக்கு அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி ரூ.20 கோடியே 29 லட்சம் மதிப்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதனைத்தொடர்ந்து ரூ.25 கோடியே 70 லட்சம் மதிப்பில் சம்பா தொகுப்பு திட்டத்தையும் செயல்படுத்தினார்். தமிழகத்தில் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களும் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. வறட்சி நிவாரண உதவித்தொகை வழங்கிட ரூ.2 ஆயிரத்து 247 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பு பணி

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண உதவித்தொகை வழங்க கணக்கெடுப்பு பணி நிறைவு பெற்றுள்ளது. இதற்காக ரூ.179 கோடியே 27 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் வங்கி கணக்கில் நிவாரண உதவித்தொகை விரைவில் செலுத்தப்படும். தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியை கருத்தில் கொண்டு கோடையில் சாகுபடி செய்யக்கூடிய பயறு வகைகளுக்கான சிறப்பு தொகுப்புத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருவாரூர் மாவட்டத்திற்கு ரூ.14 கோடியே 29 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 16 ஆயிரத்து 750 எக்டேரில் பயறு வகை பயிரில் செயல்விளக்கம் அமைக்க ரூ.3 கோடியே 35 லட்சமும், பயறு வகை பயிர்களுக்கு மழை தூவான் மற்றும் தெளிப்பு நீர் பாசன கருவி வழங்கிட ரூ.10 கோடியே 93 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள கால்நடைகள் பயன்பெறும் வகையில் 2 உலர் தீவன கிடங்குகள் ரூ.37 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பில் கோட்டூர் மற்றும் வேப்பஞ்சேரி ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ளது. மேலும் ரூ.8 லட்சம் மதிப்பில் பசுந்தீவன சோளம் 400 ஏக்கரில் பயிரிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குடிநீர் பற்றாக்குறை

திருவாரூர் மாவட்டம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால் 10 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 430 ஊராட்சிகள், 7 பேரூராட்சிகள், 4 நகராட்சிகளில் உள்ள பொது நிதி, ஊராட்சி ஒன்றிய பொது நிதி, 14-வது நிதி குழு மானியம், மாவட்ட ஊராட்சி நிதி மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவற்றிலிருந்து தேவைப்படும் இடங்களில் தேவைக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தியாகராஜன், வேளாண்மை இணை இயக்குனர் மயில்வாகனன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ரவீந்திரன், உதவி கலெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story