ஜல்லிப்பட்டியில் மதுக்கடையை அகற்ற கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்


ஜல்லிப்பட்டியில்  மதுக்கடையை அகற்ற கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 28 Feb 2017 10:30 PM GMT (Updated: 2017-03-01T04:59:56+05:30)

ஜல்லிப்பட்டியில் மதுக்கடையை அகற்ற கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்

நெகமம்,

ஜல்லிப்பட்டியில் மதுக்கடையை அகற்ற கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். ஒரு மாதத்தில் மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மண்டல மேலாளர் உறுதியளித்ததால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

பஸ் நிறுத்தம் அருகே மதுக்கடை

உடுமலை–பல்லடம் ரோட்டில் உள்ள ஜல்லிப்பட்டியில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை அருகே பஸ் நிறுத்தம் இருக்கிறது. காலை, மாலை நேரங்களில் பஸ்சுக்காக பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளும், வேலைக்கு செல்வதற்காக பெண்களும் நிற்கிறார்கள்.

பஸ் நிறுத்தம் அருகே மதுக்கடை இருப்பதால் இங்கு மது குடிக்க வருபவர்கள் மதுப்பாட்டில்களை வாங்குகிறார்கள். மேலும் இந்த மதுக்கடையில் பார் வசதி இல்லாததால் ரோட்டில் நின்றுக்கொண்டு மதுப்பாட்டில்களை திறந்து குடிக்கின்றனர். சில நேரங்களில் பஸ் நிறுத்தத்தில் பெண்கள் மட்டுமே நிற்கும் போது குடிமகன்கள் சிலர் போதையில் வந்து அவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஜல்லிப்பட்டியில் செயல்படும் மதுக்கடையை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

500 மதுக்கடைகளை மூட உத்தரவு

இந்த நிலையில் தமிழகத்தில் மதுக்கடைகள் படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மறைந்த அப்போதைய முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். முதற்கட்டமாக 500 மதுக்கடைகளை மூடி நடவடிக்கை எடுத்தார். அப்போதும் இந்த மதுக்கடை மூடவில்லை. தற்போது புதிதாக பொறுப்பேற்று உள்ள முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேலும் 500 மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பித்தார். அதன்படி தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்பட்டன.

இப்போதும் ஜல்லிப்பட்டியில் செயல்படும் மதுக்கடையை மூடுவார்கள் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மதுக்கடையை மூடவில்லை. 500 மதுக்கடையில் இந்த மதுக்கடை இல்லை என்பதை அறிந்த பொதுமக்கள் மதுக்கடையை மூட போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

முற்றுகை போராட்டம்

அதன்படி நேற்று காலை 11 மணிக்கு மதுக்கடை முன் திரண்டனர். அப்பகுதியை சேர்ந்த பெண்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். மதுக்கடையை திறக்க விடமாட்டோம் என்று கோ‌ஷமிட்டு மதுக்கடை முன் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு நீலகண்டன், நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகசுந்தரம், பொள்ளாச்சி மது விலக்கு இன்ஸ்பெக்டர் நடேசன், கோமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை

இதில் சமாதானம் அடையாத பொதுமக்கள் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தை தொடர்ந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் டாஸ்மாக் கோவை தெற்கு மண்டல மேலாளர் பாலாஜி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் போது ஜல்லிப்பட்டியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை இன்னும் ஒரு மாதத்திற்குள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தால் அந்தப்பகுதியில் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story