பா.ஜனதா, தி.மு.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளால் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க சதி: அன்பழகன் எம்.எல்.ஏ
பா.ஜனதா, தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளால் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க சதி செய்து வருவதாக அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றம்சாட்டினார்.
புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் தமிழக முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் 69–வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சுதேசி காட்டன் மில் அருகே நேற்று நடைபெற்றது. விழாவுக்கு அ.தி.மு.க. மாநில செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான புருஷோத்தமன் தலைமை தாங்கினார்.
அவைத்தலைவர் பாண்டுரங்கன், எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.எல்.ஏ.வும், பேராசிரியருமான தீரன் என்கிற ராஜேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
ஆட்சியை கவிழ்க்க சதிகூட்டத்தில் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:–
அ.தி.மு.க. மிகப்பெரிய இயக்கமாக விளங்கி வருகிறது. இதனை பிளவுப்படுத்தி, ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதாவும், தி.மு.க.வும், காங்கிரசும் சதி செய்கின்றன. நாங்கள் ராணுவ கட்டுகோப்போடு உள்ளோம். அ.தி.மு.க.வுக்கு ஓ.பன்னீர்செல்வம் துரோகம் செய்துவிட்டார்.
தமிழக சட்டசபையில் நடந்த அமளிக்கு தி.மு.க.தான் காரணம். அவர்கள் சட்டசபையில் ரவுடிகளை போல் நடந்துகொண்டனர். சட்டசபையின் மாண்பை மீறி செயல்பட்டதுடன், சபாநாயகரும் தாக்கப்பட்டார். சபாநாயகர் நினைத்து இருந்தால் தி.மு.க.வினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து இருக்க முடியும். அ.தி.மு.க.வை பற்றி குறைக்கூற தி.மு.க.வினருக்கோ, காங்கிரசுக்கோ அருகதை இல்லை.
தேர்தல் அறிவிப்புசட்டசபையின் மாண்பை மீறிய தி.மு.க.வினர் சார்பில் புதுவையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார். தமிழக சட்டசபையில் தி.மு.க.வினர் நடந்து கொண்டதைப்போல, புதுவை சட்டசபையில் நாங்கள் நடந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?
புதுவை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் எதையும் காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை. இந்த அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. மக்களுக்கான எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. மத்திய அரசிடம் இருந்து நிதியை வாங்க டெல்லிக்கு செல்கிறேன் எனக்கூறிக்கொண்டு முதல்–அமைச்சரும், அமைச்சர்களும் கவர்னரை மாற்றுவதற்கு போராடி வருகிறார்கள். முதல்–அமைச்சரும், கவர்னரும் மாறி, மாறி சண்டைப் போட்டுக்கொண்டு மக்களுக்கான நலத்திட்டங்களை செய்வது இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முடிவில் உருளையன்பேட்டை தொகுதி துணை செயலாளர் கோபால் நன்றி கூறினார்.