சட்டம்– ஒழுங்கு பிரச்சினையில் முட்டுக்கட்டை போடும் புல்லுருவிகளை ஒடுக்குவோம் முதல்– அமைச்சர் உறுதி


சட்டம்– ஒழுங்கு பிரச்சினையில் முட்டுக்கட்டை போடும் புல்லுருவிகளை ஒடுக்குவோம் முதல்– அமைச்சர் உறுதி
x
தினத்தந்தி 1 March 2017 4:30 AM IST (Updated: 1 March 2017 5:00 AM IST)
t-max-icont-min-icon

சட்டம்– ஒழுங்கு பிரச்சினையில் முட்டுக்கட்டை போடும் புல்லுருவிகளை முற்றிலும் ஒடுக்குவோம் என்று போலீஸ் பயிற்சி நிறைவு விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

நாராயணசாமி

புதுவை காவல்துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட போலீசார் மற்றும் ஐ.ஆர்.பி.என். போலீசாருக்கான பயிற்சி நிறைவு விழா கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. விழாவில் கலந்துகொண்டு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–

புதுவை சிறிய மாநிலமாக இருந்தாலும் காவல்துறை சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது எங்களது எண்ணமாகும். பொதுமக்களின் சொத்துகள், உடமைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதை காவல்துறை உதவியோடு நிறைவேற்றி வந்து உள்ளோம். காவல்துறையினரின் துரிதமான செயல்பாட்டினால் புதுவை மாநிலம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. இப்போது புதிதாக போலீசார் தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக பயிற்சியை முடித்துள்ளனர். இந்த பயிற்சியில் புதுவை மாநிலம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது.

புல்லுருவிகளை ஒடுக்குவோம்

புதுவையில் ஆன்மிக சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா, பொழுதுபோக்கு சுற்றுலா என்ற 3 அம்சங்கள் உள்ளன. கடந்த 8 மாதங்களாக சட்டம்– ஒழுங்கு கட்டுக்குள் வைக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆட்சிக்காலத்தில் சட்டம்– ஒழுங்கு சரியில்லாமல் இருந்ததால் தொழில் அதிபர்கள் தொழிற்சாலைகளை மூடிவிட்டு வெளியேறினார்கள்.

இப்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதால் தொழிலதிபர்கள் தொழில் தொடங்க தானாக முன்வருகிறார்கள். தொழிலதிபர்களை ரவுடிகள் மிரட்டி பணம் பறிப்பது முறியடிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் சில புல்லுருவிகள் மட்டும் இதற்கு முட்டுக்கட்டை போடும்வகையில் தொல்லை கொடுக்கிறார்கள். அவர்களை முற்றிலும் ஒடுக்குவோம். தற்போது பயிற்சி முடித்துள்ள போலீசார் அனைவரும் தங்கள் கடமையை உணர்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும். நேர்மையான முறையில் நடந்து தவறுகள் நடந்தால் தட்டிக்கேட்க வேண்டும்.

பாரபட்சம் கூடாது

போலீசுக்கு என்று ஏராளமான அதிகாரங்கள் உள்ளன. அதை தவறாக பயன்படுத்தாமலும், பாரபட்சம் இல்லாமலும் நடந்து கொள்ள வேண்டும். தற்போது 98 பெண் போலீசாரும் பயிற்சி முடித்துள்ளனர். அவர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முழு முயற்சியுடன் செயல்பட வேண்டும். பொதுமக்களுக்கு பாதுகாப்பு தருவதில் புதுச்சேரிக்கு முதல்பரிசு கிடைத்துள்ளது.

காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்ற எண்ணத்தை உருவாக்கவேண்டும். பயிற்சியை நிறைவு செய்யும் காவலர்கள் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்து நேர்மையாக செயல்பட்டு கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரர்களாக திகழவேண்டும். காவல்துறையில் சில குறைபாடுகள் உள்ளன. அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுப்போம்.

புதுவை காவல்துறையை நவீனப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் நிதியுதவி அளிக்கவேண்டும்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

--–

படம் உண்டு


Next Story