அமராவதி ஆற்றின் குறுக்கே கி.பி 12–ம் நூற்றாண்டை சேர்ந்த தடுப்பணை கண்டுபிடிப்பு


அமராவதி ஆற்றின் குறுக்கே கி.பி 12–ம் நூற்றாண்டை சேர்ந்த தடுப்பணை கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 1 March 2017 4:30 AM IST (Updated: 1 March 2017 5:02 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே அமராவதி ஆற்றின் குறுக்கே, கி.பி 12–ம் நூற்றாண்டை சேர்ந்த தடுப்பணை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமராவதி ஆறு

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தமிழக–கேரள எல்லையில் உள்ள மஞ்சம்பட்டி மேற்கு தொடர்ச்சி மலையில் அமராவதி ஆறு உற்பத்தியாகிறது. சங்ககாலத்தில் ஆன்பொருணை என்று இந்த ஆறு அழைக்கப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து சுமார் 282 கிலோமீட்டர் தூரம் பயணித்து திருமுக்கூடலில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது.

இந்தநிலையில் பழனி சாமிநாதபுரத்திற்கு அருகே, அமராவதி ஆற்றின் குறுக்கே பழங்கால தடுப்பணை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி, ஆய்வு மாணவர்கள் வேங்கடம், சேரல் பொழிவன் ஆகியோர் இந்த தடுப்பணையை கண்டுபிடித்துள்ளனர்.

தடுப்பணையின் அருகே ஒரு கல்வெட்டு இருந்தது. அந்த கல்வெட்டு, கி.பி 12ஆம் நூற்றாண்டில் அணை கட்டப்பட்ட தகவலை தெரிவிக்கிறது. பாறையின் மேல் அணையையொட்டி இந்த கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. கொங்குசோழ மன்னன் வீர நாராயணனி ஆட்சி காலத்தில், கி.பி 1,157–ல் இந்த அணை கட்டப்பட்டிருக்கிறது.

அணையின் கட்டுமானம்

ஆற்றின் அருகில் உள்ள கடத்தூர் எனும் ஊரை சேர்ந்த பொதுமக்கள் ஒன்றுகூடி விவசாயத்துக்காக இந்த தடுப்பணையை கட்டியதை கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. தடுப்பணையின் பெரும்பகுதி அழிந்து விட்ட நிலையில், எஞ்சிய பகுதிகள் இன்றும் அழியாமல் உள்ளது.

அணையின் கிழக்கு பகுதியில் வெட்டப்பட்ட ஒரு மதகு வாய்க்கால் இன்றளவும் அழியாமல் உள்ளது. இந்த வாய்க்கால் ஒரு அதிசயம் என்றே கூறலாம். ஏனெனில் பொதுவாக ஆற்றின் குறுக்கே அணை கட்டும் போதோ அல்லது மதகு வாய்க்கால் வெட்டும் போதோ, பாறாங்கற்களை அடியில் வைத்து அதன் மேல் செங்கற்களை வைத்துக் கட்டுவது வழக்கம். ஆனால் இங்கு செங்கற்களை அடியில் வைத்து அதன் மேல் பாறாங்கற்களை வைத்து மதகு வாய்க்கால் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story