லாலாப்பேட்டையில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கியது


லாலாப்பேட்டையில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 1 March 2017 4:15 AM IST (Updated: 1 March 2017 5:07 AM IST)
t-max-icont-min-icon

லாலாப்பேட்டையில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக தண்டவாளம் துண்டிக்கப்பட்டதால் நேற்று காலை முதல் மாலை வரை அந்த வழியாக ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

லாலாப்பேட்டை,

சுரங்கப்பாதை

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை ரெயில்வே கேட்டினால் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. பின்னர் அங்கு இயங்கி வந்த ரெயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவசர காலங்களில், அந்த வழியாக செல்ல முடியாமல் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது. இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்லக்கூட, முன் அனுமதி பெற்று கேட்டை திறந்து கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் அந்த ரெயில்வே கேட்டை திறக்க கோரி பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்திய பின்னர், அந்த ரெயில்வே கேட் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது.

இந்நிலையில் ரெயில்வே கேட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியை ரெயில்வே நிர்வாகம் நேற்று தொடங்கியது. சுரங்கம் அமைக்க ராட்சத எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இப்பணியில் ஏராளமான ரெயில்வே ஊழியர்கள், அதிகாரிகளும் ஈடுபட்டனர்.

போக்குவரத்து நிறுத்தம்

ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்ட பெரிய தூண்கள் மீது சிமெண்டு சிலாப்புகளை இருப்பு பாதையின் அடியில் குழி பறிக்கப்பட்டு பொருத்தினர். இனி சுரங்கப்பாதையை இரண்டு பகுதியிலும் இணைக்க சாலை அமைக்கும் பணி மற்றும் இதர பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக ரெயில்வே துறையினர் தெரிவித்தனர்.

முன்னதாக சுரங்கம் அமைக்கும் பணிக்காக, ரெயில் தண்டவாளம் துண்டிக்கப்பட்டது. இதனால் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அந்த வழியாக ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மாலையில் மீண்டும் தண்டவாளம் இணைக்கப்பட்டு, மாலை 6 மணிக்கு பின்னர் ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

ரெயில்வே கேட் மூடப்படுமா?

இதற்கிடையே சுரங்கம் அமைக்கும் பணியின்போது அங்கு வந்த உயர் அதிகாரிகளிடம் பொதுமக்கள், விவசாயத்திற்கு தேவையான பொருட்களை தலையில் சுமந்தும், இருசக்கர வாகனத்திலும் சுரங்கம் வழியாக கொண்டு செல்வது என்பது சிரமம், மேலும் இரவில் பெண்கள் தனியாக சுரங்கம் வழியாக செல்வது என்பது மிகவும் கடினம். ஆகவே ரெயில்வே கேட்டை எப்போதும் போல திறந்து, மூட வேண்டும், என்றனர். அதற்கு அதிகாரிகள் சுரங்கம் அமைக்கப்பட்டாலும், கேட்டின் வழியாக எப்போதும் போல சென்று வரலாம் என்று கூறினர். இருப்பினும் சுரங்கப்பாதை வந்துவிட்டதால் கேட் மூடப்படுமா? என்று பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

Next Story