திசையன்விளையில் கனிம ஆலைகளை திறக்கக்கோரி வியாபாரிகள் கடையடைப்பு


திசையன்விளையில் கனிம ஆலைகளை திறக்கக்கோரி வியாபாரிகள் கடையடைப்பு
x
தினத்தந்தி 28 Feb 2017 11:00 PM GMT (Updated: 28 Feb 2017 11:40 PM GMT)

கனிம ஆலைகளை திறக்கக்கோரி திசையன்விளையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

திசையன்விளை,

கடையடைப்பு

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் கடந்த 25 ஆண்டுகளாக 15 கனிம ஆலைகள் இயங்கி வந்தன. இதன்மூலம் ராதாபுரம் யூனியனுக்கு உட்பட்ட 27 பஞ்சாயத்துகளை சேர்ந்த ஏராளமானவர்கள் அங்கு வேலை செய்து வந்தனர். கடந்த 3 மாதங்களாக கனிம ஆலைகளை அரசு நிறுத்தி வைத்துள்ளது.

இதனால் அந்த ஆலைகளில் பணி செய்து வந்த பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கனிம ஆலைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திசையன்விளையில் வியாபாரிகள் சங்கம் சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.

தேர்தலை புறக்கணிக்க ஆலோசனை

மேலும் போராட்டம் தொடர்பாக ராதாபுரம் யூனியனுக்கு உட்பட்ட பஞ்சாயத்து முன்னாள் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், அங்குள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. கனிம ஆலைகளை திறக்க அரசு அனுமதி அளிக்காவிட்டால் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பது தொடர்பாக கிராம மக்களை கலந்து முடிவு எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் சின்னத்தம்பி (நவ்வலடி), ரவிச்சந்திரன் (ஆனைகுடி), முருகன் (அணைக்கரை), அன்சா பீவி (திருவம்பலபுரம்), பென் கிளாஸ்டிஸ் (குமாரபுரம்), ஆறுமுகராஜன் (உவரி), மதன் (ராதாபுரம்), பாலகிருஷ்ணன் (பரமேசுவரபுரம்) உள்பட 15 பஞ்சாயத்துகளை சேர்ந்த முன்னாள் தலைவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story