நெல்லை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்


நெல்லை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 28 Feb 2017 11:00 PM GMT (Updated: 28 Feb 2017 11:40 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இதையொட்டி பாளையங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை,


கோரிக்கைகள்


வங்கி ஊழியர்கள் ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடையின் உச்சவரம்பை நீக்க வேண்டும். வாராக்கடன் வசூலை துரிதப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கூடுதல் நேரம் உழைத்த ஊழியர்கள், அதிகாரிகளுக்கு உரிய கூடுதல் ஊதியத்தை வழங்க வேண்டும். அரசு ஊழியர்கள் போல் ஓய்வு பெறும் போது வழங்கப்படும் ஓய்வூதிய பலன்களுக்கு முழுமையான வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும்.

வாரத்தில் 5 நாட்கள் வேலை வழங்குவதுடன், போதிய ஊதியர்களையும் நியமிக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, மேம்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேற்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலை நிறுத்தம்


இதையொட்டி நெல்லை மாவட்டத்திலும் நேற்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 359 தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளில் பணிபுரியும் 3,100 ஊழியர்கள், அதிகாரிகள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அனைத்து வங்கிகளும் வெறிச்சோடி காணப்பட்டது. ஒட்டுமொத்த பண பரிவர்த்தனை முடங்கியது.

இதையொட்டி பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள கனரா வங்கி முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வங்கி ஊழியர் கூட்டமைப்பு தலைவர் கில்பர்ட் ராஜ், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் ரெங்கன், வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு நம்பிராஜ், வங்கி அதிகாரிகள் சங்கம் சவுந்தர்யா, வங்கி ஊழியர் சம்மேளனம் முத்தையா ஆகியோர் தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story