நெல்லையில் நடந்த கைதி கொலையில் மேலும் 3 பேர் கைது


நெல்லையில் நடந்த கைதி கொலையில் மேலும் 3 பேர் கைது
x
தினத்தந்தி 1 March 2017 3:45 AM IST (Updated: 1 March 2017 5:10 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் போலீஸ் ஜீப்பை வழிமறித்து கைதி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

நெல்லை,


கைதி கொலை


தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புல்லாவெளி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சிங்காரம் என்ற பாலசுப்பிரமணியன் (வயது 47). பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய இவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

கடந்த 24–ந் தேதி ஒரு வழக்கு சம்பந்தமாக தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக சிங்காரத்தை போலீசார் பாளையங்கோட்டை சிறையில் இருந்து ஒரு ஜீப்பில் ஏற்றி தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்றனர். பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் சென்ற போது போலீஸ் ஜீப்பை காரில் வந்தவர்கள் வழிமறித்து கைதி சிங்காரத்தை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.

மேலும் 3 பேர் கைது


இந்த வழக்கில் குமரி மாவட்டம் கருங்கல் பாலூரை சேர்ந்த அருள்மணி (28) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதவிர மீன் ஏற்றிச்செல்லும் லாரியை விலைக்கு வாங்கி கொடுத்த களக்காட்டை சேர்ந்த அகஸ்டின் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மேலும் சிலர் பாளையங்கோட்டை போலீசாரிடம் சிக்கினர். அவர்களை போலீசார் ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வந்தனர். இதில் குமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்த சேட், கார்மேகம், சந்தோஷ் ஆகிய 3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். இதுதவிர சுபாஷ் பண்ணையார் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story