குறுந்தொழில் பாதிக்கும் அபாயம்: சரக்கு வாகனங்களை வழிமறித்து கெடுபிடி செய்யக்கூடாது வணிகவரித்துறை இணை கமி‌ஷனரிடம் காட்மா சங்கத்தினர் மனு


குறுந்தொழில் பாதிக்கும் அபாயம்: சரக்கு வாகனங்களை வழிமறித்து கெடுபிடி செய்யக்கூடாது வணிகவரித்துறை இணை கமி‌ஷனரிடம் காட்மா சங்கத்தினர் மனு
x
தினத்தந்தி 2 March 2017 10:45 PM GMT (Updated: 2 March 2017 2:17 PM GMT)

உதிரிபாகங்கள் கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களை வழிமறித்து அபராதம் விதித்து கெடுபிடி செய்யக்கூடாது.

கோவை,

குறுந்தொழில் கூடங்கள்

கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் (காட்மா) சங்க தலைவர் எஸ்.ரவிக்குமார், மற்றும் பொதுச்செயலாளர் சிவக்குமார் உள்பட நிர்வாகிகள் 50–க்கும் மேற்பட்டோர், கோவை மண்டல வணிக வரித்துறை இணை ஆணையரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருப்பதாவது:–

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் கூடங்கள் இயங்கி வருகின்றன. இந்த குறுந்தொழில் கூடங்களில் ஆட்டோ மொபைல், கிரைண்டர், மோட்டார் பம்பு செட்டுகள், ஜவுளித்துறை உள்பட பல்வேறு துறைகளுக்கு தேவையான உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த உற்பத்திக்கு சிறு, நடுத்தர, பெரிய நிறுவனங்களிடம் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஜாப் ஆர்டர்களாக பெறப்படுகிறது. இந்த வகையில் 15 முதல் 20 சதவீதம் வரை உள்ள குறுந்தொழில் முனைவோர்கள்தான் வணிக வரித்துறையின் பதிவு சான்றிதழ் பெற்று (டின் நம்பர்) குறுந்தொழில் கூடங்களை இயக்கி வருகின்றனர்.

அனுமதி அளிக்க வேண்டும்

இந்த நிலையில் தற்போது வணிக வரித்துறையில் நவீன மயமாக்கம் என்கிற பெயரில் கணினி முறையை புகுத்தி வருகின்றனர். இந்த நிலையில் டின் நம்பர் இல்லாத குறுந்தொழில் நிறுனங்களின் நலனை கருத்தில் கொண்டு கட்டாயம் ஜே.ஜே.படிவத்தை கொண்டு வரவேண்டும் என்கிற விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். டின் நம்பர் இல்லாமல் இயங்கும் பெரும்பாலான குறுந்தொழில் நிறுவனங்கள் மிக சிறிய அளவில் 1 லேத், 2 லேத் பட்டறை என்று வைத்துக்கொண்டு இயங்குவதால் அந்த குறுந்தொழில் நிறவனங்களில் கணினி வசதியும் இல்லாத நிலை உள்ளது. இதனால் அவர்கள் பழைய ஜே.ஜே. படிவத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆகவே அந்த படிவத்தை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும்.

கெடுபிடி

மேலும் கணினி வசதி இல்லாத டின் நம்பர் பெற்று இயங்கும் குறுந்தொழில் கூடங்களில் இருந்து முறையாக வணிக வரியுடன் கூடிய பில்களுடன் உதிரிபாகங்களை சரக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கும்போது அதிகாரிகள் வாகனங்களை வழி மறித்து பிடிக்கிறார்கள். அவர்கள் பில்களுடன் சேர்த்து பதிவிறக்கம் செய்த ஜே.ஜே.படிவம் வேண்டும் என்று கேட்டு அபராதம் விதிக்கின்றனர்.

குறிப்பாக சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி, பீளமேடு, சிங்காநல்லூர், சங்கனூர், துடியலூர், நீலாம்பூர், அரசூர், தாடாகம்ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த நடவடிக்கை தொடர்கிறது. இதனால் குறுந்தொழில்கள் பாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. ஆகவே முறையான பில்களுடன் வருகின்ற உதிரிபாகங்கள் ஏற்றிவரும் வாகனங்களை வணிகவரித்துறை அதிகாரிகள் தேவையில்லாமல் கெடுபிடி செய்வதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறிஉள்ளனர்.


Next Story