முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் வாகன நிறுத்தும் இடம் அமைத்ததை எதிர்த்து கண்டன ஊர்வலம்–போராட்டம்
முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் வாகன நிறுத்தும் இடம் அமைத்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
தேனி,
முல்லைப்பெரியாறு அணைதமிழக–கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்து உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக இந்த அணை திகழ்கிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி சுமார் 8 ஆயிரம் ஏக்கர் ஆகும். இந்த நீர்ப்பிடிப்பு பகுதியில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன.
இந்த அணையின் மொத்த உயரம் 152 அடி ஆகும். இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. அணைப் பகுதியில் உள்ள பேபி அணையை பலப்படுத்திவிட்டு 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்தும் பணியை மேற்கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது. அவ்வாறு 152 அடியாக நீர்மட்டம் உயர்த்தப்படும் போது, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள பல ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் மூழ்கும் நிலை உள்ளது.
வாகன நிறுத்தும் இடம்இப்படிப்பட்ட நிலையில், குமுளி அருகே ஆனவச்சால் பகுதியில் சுற்றுலா பயணிகளின் வாகனம் நிறுத்தும் இடம் அமைக்க கேரள வனத்துறை முயற்சி மேற்கொண்டது. நேற்று முன்தினம் முதல் இந்த வாகன நிறுத்தும் இடம் பயன்பாட்டுக்கு வந்தது.
சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் இங்கு நிறுத்தப்பட்டது. இங்கிருந்து வனத்துறைக்கு சொந்தமான பஸ்களில், தேக்கடி ஏரிக்கு சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆனவச்சால் பகுதியில் வாகன நிறுத்தும் இடம் அமைப்பதற்கு முன்பு, தேக்கடியில் ‘ஆமை பார்க்’ என்ற இடம் வாகன நிறுத்தமாக செயல்பட்டு வந்தது. இந்த இடத்துக்கு குமுளி பஸ் நிலையத்தில் இருந்து நூற்றுக்கணக்கான ஆட்டோக்கள், வாடகை கார்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனவச்சாலில் வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டதால் ஆட்டோ டிரைவர்கள், வாடகை கார் டிரைவர்கள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த திட்டத்துக்கு குமுளியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
ஊர்வலம்–போராட்டம்இதையடுத்து, ஆனவச்சாலில் வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டதை கண்டித்தும், ‘ஆமை பார்க்’ பகுதிக்கு வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்தும் குமுளியில் நேற்று கண்டன ஊர்வலம் மற்றும் வனத்துறை சோதனை சாவடி முற்றுகை போராட்டம் நடந்தது. அனைத்து கட்சிகள் சார்பிலும், ஆட்டோ டிரைவர்கள், வாடகை கார் உரிமையாளர்கள், ஓட்டல் சங்கம், வர்த்தகர் சங்கம் ஆகியவை சார்பில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
அரசியல் கட்சியினர், வியாபாரிகள், டிரைவர்கள் ஆகியோர் குமுளியில் இருந்து தேக்கடி சாலையில் உள்ள வனத்துறை சோதனை சாவடி வரை கண்டன ஊர்வலமாக சென்றனர். பின்னர், சோதனை சாவடியை முற்றுகையிட்டனர். அங்கிருந்து தேக்கடி ஏரிக்கு செல்லும் நுழைவு வாயில் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந்த போராட்டத்தில், குமுளி ஊரக வளர்ச்சி குழு தலைவர் பின்னிமோள் ஜாக்கோ, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ரசாக், ஓட்டல் சங்க நிர்வாகி சாஜி, குமுளி வியாபாரிகள் சங்க தலைவர் சிபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பகுதி செயலாளர் சிம்சன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் தங்கப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
போக்குவரத்து முடக்கம்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘ஆமை பார்க் பகுதியில் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, ஆனவச்சாலில் வாகன நிறுத்தும் அமைக்கப்பட்டதால் வியாபாரிகள், வாடகை கார் டிரைவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆட்டோ டிரைவர்கள், வாடகை கார் டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படும். ஆமை பார்க் வரை மீண்டும் வாகனங்களை அனுமதிக்க வேண்டும். முன்பு இருந்த நடைமுறையையே மீண்டும் பின்பற்ற வேண்டும். அதிகப்படியான வாகனங்கள் வந்தால் மட்டும், ஆனவச்சால் பகுதியை பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்றனர்.
இந்த முற்றுகை போராட்டம் காலை 11 மணியளவில் தொடங்கியது. பிற்பகல் 2 மணி வரை போராட்டம் நீடித்தது. இதனால், தேக்கடிக்கு வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது. சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து முடங்கியதால், சுற்றுலா பயணிகள் பரிதவித்தனர். தேக்கடிக்கு வந்த சுற்றுலா பயணிகள் பலர், தங்களின் வாகனங்களில் வேறு இடத்திற்கு திரும்பிச் சென்றனர். பிற்பகல் 2 மணிக்கு பிறகு போராட்டம் முடிவடைந்ததால், மீண்டும் வாகன போக்குவரத்து தொடங்கியது. இந்த போராட்டம் குமுளியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.