மாவட்டம் முழுவதும் 14,926 மாணவ–மாணவிகள் பிளஸ்–2 தேர்வு எழுதினர்


மாவட்டம் முழுவதும் 14,926 மாணவ–மாணவிகள் பிளஸ்–2 தேர்வு எழுதினர்
x
தினத்தந்தி 2 March 2017 11:00 PM GMT (Updated: 2017-03-02T22:24:25+05:30)

தேனி மாவட்டம் முழுவதும் 14,926 மாணவ–மாணவிகள் பிளஸ்–2 அரசு பொதுத்தேர்வை எழுதினர்.

தேனி,

பிளஸ்–2 தேர்வு

பிளஸ்–2 அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. தேனி மாவட்டத்தில் மொத்தம், 124 பள்ளிகளை சேர்ந்த 15 ஆயிரத்து 29 மாணவ–மாணவிகள் பிளஸ்–2 தேர்வுக்காக தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (ஹால் டிக்கெட்) பெற்று இருந்தனர். இவர்களில் 14 ஆயிரத்து 926 பேர் நேற்று தேர்வு எழுதினர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 46 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 103 மாணவ–மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் கல்வி மாவட்டம், உத்தமபாளையம் கல்வி மாவட்டம் என 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் 66 பள்ளிகளை சேர்ந்த 8,073 மாணவ–மாணவிகளுக்கு தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. இதில், 8,035 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினர். 38 பேர் தேர்வு எழுதவில்லை.

உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில் 58 பள்ளிகளை சேர்ந்த 6,956 மாணவ–மாணவிகள் தேர்வு எழுத அனுமதி பெற்று இருந்த நிலையில், 6,891 பேர் தேர்வு எழுதினர். 65 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தனித்தேர்வர்கள்

தனித்தேர்வர்களை பொறுத்தவரை மாவட்டம் முழுவதும் மொத்தம் 364 பேர் தேர்வு எழுத ஹால்டிக்கெட் பெற்று இருந்தனர். இதில், 333 பேர் தேர்வு எழுதினர். 31 பேர் தேர்வு எழுதவில்லை. கல்வி மாவட்டம் வாரியாக பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் 148 தனித்தேர்வர்கள் அனுமதி பெற்று இருந்த நிலையில், 132 பேர் தேர்வு எழுதினர். 16 பேர் தேர்வு எழுத வரவில்லை.

உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில் 216 தனித்தேர்வர்கள் தேர்வுக்கு அனுமதி பெற்று இருந்தனர். இதில், 201 பேர் தேர்வு எழுதிய நிலையில், 15 பேர் தேர்வுக்கு வரவில்லை.

கலெக்டர் பார்வையிட்டார்

தேர்வு நடைபெற்ற அனைத்து மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு அறைகளில் கண்காணிப்பு பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தேர்வு நடைபெற்ற மையங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

மேலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வாசு மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்டு இருந்த பறக்கும் படையினரும் தேர்வு யைங்களில் திடீர் சோதனைகள் மேற்கொண்டனர்.

பார்வையற்ற மாணவர்கள்

கண்பார்வையற்ற மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இத்தகைய மாணவர்கள், ஆசிரியர்களின் உதவியுடன் தேர்வு எழுதினர். அந்த வகையில் தேனி மாவட்டத்தில் கண்பார்வையற்ற மாணவர்கள் 11 பேர் ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுதினர். வினாக்களை ஆசிரியர்கள் வாசித்த பின்பு, அதனை கூர்ந்து கேட்டறிந்த மாணவர்கள் அதற்கான விடைகளை தெரிவித்தனர். அதனை விடைத்தாளில் ஆசிரியர்கள் எழுதினர். தமிழ் முதல் தாள் தேர்வு எழுதிய மாணவ–மாணவிகளிடம் தேர்வு குறித்து கேட்டபோது தேர்வு எளிதாக இருந்ததாக தெரிவித்தனர்.

இந்த தேர்வுக்காக தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே மாணவ–மாணவிகள் தேர்வு மையத்தில் குவியத் தொடங்கினர். தேர்வு அறைக்குள் நுழையும் கடைசி நிமிடம் வரை மாணவ–மாணவிகள் புத்தகங்களை புரட்டி படித்துக் கொண்டு இருந்த காட்சிகளை பார்க்க முடிந்தது. சில மாணவ–மாணவிகள் பள்ளிக்கு பஸ்களில் வரும் போதும் புத்தகங்களை வாசித்தபடியே வந்தனர்.

பள்ளிகள் அருகில் அமைந்துள்ள கோவில்களில் காலை நேரங்களில் மாணவ–மாணவிகள் கூட்டமாக காணப்பட்டது. தேர்வுக்கு செல்லும் முன்பு ஏராளமான மாணவ–மாணவிகள் கோவில்களில் சாமி கும்பிட்டுச் சென்றனர்.


Next Story