தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு வாரியாக வாக்காளர்களை கணக்கெடுக்க உத்தரவு


தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு வாரியாக வாக்காளர்களை கணக்கெடுக்க உத்தரவு
x
தினத்தந்தி 3 March 2017 4:15 AM IST (Updated: 2 March 2017 11:31 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு வாரியாக வாக்காளர்களை கணக்கெடுக்க தமிழக தேர்தல் கமி‌ஷன் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

திண்டுக்கல்,

தேர்தல் கமி‌ஷன் உத்தரவு

தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல் கோர்ட்டு தடை உத்தரவால் ரத்தானது. இதுதொடர்பான வழக்கும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, கோர்ட்டு அறிவுறுத்தல்படி விரைவில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே செய்திருந்த பணிகளை முதலில் இருந்து மேற்கொள்ள வேண்டி இருப்பதால், தேர்தல் கமி‌ஷன் துரிதமாக செயல்பட தொடங்கி இருக்கிறது.

முதற்கட்டமாக கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலுக்கு ஏற்ப வாக்குச்சாவடிகளை பிரிக்குமாறு சில நாட்களுக்கு முன்பு தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டது. தற்போது, அனைத்து மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கும் மற்றொரு உத்தரவை பிறப்பித்து உள்ளது.

21–ந்தேதி அறிக்கை

அதில், ‘கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் தகுதியற்றவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருப்பதாலும், புதிதாக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாலும் வாக்காளர்களின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது. எனவே, சட்டமன்றம் வாரியாக இருக்கும் வாக்காளர்களை, வார்டு வாரியாக கணக்கெடுத்து விவரங்களை தயார் செய்ய வேண்டும். அதை வருகிற 21–ந்தேதிக்குள் அறிக்கையாக அளிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகளும், பழனி நகராட்சியில் 33 வார்டுகளும், கொடைக்கானல் நகராட்சியில் 24 வார்டுகளும், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 18 வார்டுகளும், 23 பேரூராட்சிகளில் 348 வார்டுகளும் உள்ளன. இதே போல, 306 ஊராட்சிகளில் 2 ஆயிரத்து 772 வார்டுகள் இருக்கின்றன.

3 ஆயிரத்து 233 வார்டுகள்

தேர்தல் கமி‌ஷன் உத்தரவு எதிரொலியாக மொத்தம் உள்ள 3 ஆயிரத்து 243 வார்டுகளிலும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்ய இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு வார்டு வாரியாக வாக்காளர்கள் விவரங்களை கணக்கெடுக்கிறார்கள். இந்த பணியின்போது ஏற்கனவே வாக்காளர்கள், அரசியல் கட்சியினர் அளித்திருக்கும் மனுக்களும் பரிசீலனை செய்யப்படும்.

பிறகு, ஒவ்வொரு வார்டு வாரியாக இருக்கும் வாக்காளர் விவரங்களை அறிக்கையாக தயார் செய்து, 21–ந்தேதிக்குள் தமிழக தேர்தல் கமி‌ஷனிடம் அதிகாரிகள் தாக்கல் செய்ய இருக்கிறார்கள். இந்த பணியில் உடனடியாக ஈடுபட இருப்பதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story