பிளஸ்–2 தேர்வு தொடக்கம்: தமிழ் முதல்தாளை 28,664 மாணவ, மாணவிகள் எழுதினர்


பிளஸ்–2 தேர்வு தொடக்கம்: தமிழ் முதல்தாளை 28,664 மாணவ, மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 2 March 2017 11:00 PM GMT (Updated: 2 March 2017 6:14 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பிளஸ்–2 தேர்வு தொடங்கியது.

நாமக்கல்,

பிளஸ்–2 தேர்வு

தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்–2 தேர்வு தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் இந்த ஆண்டு அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 198 பள்ளிகளில் இருந்து மொத்தம் 15 ஆயிரம் மாணவர்கள், 14 ஆயிரத்து 832 மாணவிகள் என 29 ஆயிரத்து 832 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

இவர்களுடன் சேர்த்து தனித்தேர்வர்கள் 501 பேர் என மொத்தமாக மாவட்டம் முழுவதும் 30 ஆயிரத்து 333 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் தேர்வு எழுத வசதியாக மாவட்டம் முழுவதும் 74 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.

தமிழ் முதல்தாளை 325 பேர் எழுதவில்லை

முதல்நாளான நேற்று தமிழ் முதல்தாள் தேர்வை எழுத 28 ஆயிரத்து 795 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 28 ஆயிரத்து 501 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மீதமுள்ள 294 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. தனித்தேர்வர்களை பொறுத்த வரையில் தமிழ் முதல்தாள் தேர்வை 194 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 163 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 31 பேர் தேர்வு எழுத வரவில்லை. மொத்தமாக தமிழ் முதல்தாள் தேர்வை 28 ஆயிரத்து 664 பேர் எழுதினர். இதேபோல் 294 மாணவ, மாணவிகள், 31 தனித்தேர்வர்கள் என 325 பேர் எழுதவில்லை.

தேர்வு பணியில் 1,900 பேர்

பிளஸ்–2 தேர்வு கண்காணிப்பு பணியில் 74 முதன்மை கண்காணிப்பாளர்கள், 1500 அறை கண்காணிப்பாளர்கள், 74 துறை அலுவலர்கள், 250 பேர் கொண்ட பறக்கும் படை, வழித்தட அலுவலர்கள் என மொத்தம் சுமார் 1,900 ஆயிரம் பேர் ஈடுபட்டனர். பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் லதா, நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கோபிதாஸ் மற்றும் பறக்கும் படை அலுவலர்கள் ஒவ்வொரு மையமாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். தேர்வை முன்னிட்டு அனைத்து மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பிளஸ்–2 தேர்வு தொடங்கியதை முன்னிட்டு நேற்று காலையில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், பலப்பட்டரை மாரியம்மன் கோவில் என அனைத்து கோவில்களிலும் மாணவ, மாணவிகள் அதிக அளவில் சாமிதரிசனம் செய்வதை காண முடிந்தது. இதுதவிர அனைத்து மையங்களிலும் முதன்மை கண்காணிப்பாளர்கள் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.


Next Story