சமத்துவ மக்கள் கட்சி பொதுச் செயலாளராக சரத்குமார் தேர்வு


சமத்துவ மக்கள் கட்சி பொதுச் செயலாளராக சரத்குமார் தேர்வு
x
தினத்தந்தி 2 March 2017 10:45 PM GMT (Updated: 2017-03-03T02:50:41+05:30)

சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளராக சரத்குமார் நியமனம் செய்யப்படுவதாகவும், உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதெனவும் கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

சென்னை,

சமத்துவ மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் தலைமை தாங்கினார். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக இருந்த ஆர்.சரத்குமார், பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவைத் தலைவராக மணிமாறன், பொருளாளராக சுந்தரேசன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

உண்ணாவிரதம்

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஏற்கனவே இருசக்கர பேரணி நடத்தப்பட்டது. இந்த மாத இறுதிக்குள் இந்த திட்டம் நிறைவேற்றப்படாவிட்டால், ஏப்ரல் மாதம் 2-ந் தேதி முதல் ஆர்.சரத்குமார் தலைமையில் கட்சி தொண்டர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. நெடுவாசல் பகுதியில் மக்கள் போராடி வருகின்றனர். அந்த திட்டத்தை உடனே மத்திய அரசு கைவிட வேண்டும். காவிரி ஆற்றின் கிளை ஆறான கொல்லிடத்தில் குறுக்கே தடுப்பணை கட்டி நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும்.

கண்டனம்

நெம்மேலி, மீஞ்சூரில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்போல், தமிழகத்தின் கடலோர பகுதிகளில் அந்த திட்டத்தை கொண்டுவர மாநில அரசு முன்வர வேண்டும். பெப்சி நிறுவனம் தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான தடையை நீக்கி மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு இந்த கூட்டம் கண்டனம் தெரிவிக்கிறது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story