இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு: நெடுவாசலில் 15-வது நாளாக எழுச்சி போராட்டம்


இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு: நெடுவாசலில் 15-வது நாளாக எழுச்சி போராட்டம்
x
தினத்தந்தி 2 March 2017 11:00 PM GMT (Updated: 2017-03-03T02:55:19+05:30)

நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, 15-வது நாளாக எழுச்சி போராட்டம் நடந்தது. இதில் ஏர் கலப்பைகள், காய்கறிகளுடன் விவசாயிகள், பெண்கள் பங்கேற்றனர்.

திருச்சி,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவை சேர்ந்த நெடுவாசல், கருநல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு, வாணக்கன்காடு, வடகாடு ஆகிய இடங்களில் ‘ஹைட்ரோ கார்பன்‘ என்னும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 16-ந் தேதி முதல் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

நெடுவாசல் நாடியம்மன் கோவில் குளக்கரையில் நேற்று 15-வது நாளாக எழுச்சி போராட்டம் தொடர்ந்தது. நேற்றைய போராட்டத்தில் நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த கிராமங்களை சேர்ந்த பெண்கள் பலர் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். இவர்களை தவிர வெளிமாவட்டங்களை சேர்ந்த பலரும் அங்கு வந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

காய்கறிகளுடன் வந்த கிராம மக்கள்

அப்போது போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் மாணவர்கள், இளைஞர்கள் அணி, அணியாக திரண்டு போராட்ட களத்துக்கு வந்தனர். அவர்களை அங்கு அமர்ந்திருந்த பெண்களும், கிராம மக்களும் கைத்தட்டி வரவேற்றனர்.

நெடுவாசலில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள புள்ளான்விடுதி கிராம மக்கள் வாழை, கரும்பு, சுரைக்காய், பலா, மாங்காய் என அனைத்து வகையான காய்கறிகளையும் கையில் எடுத்துக்கொண்டு நெடுவாசலுக்கு வந்தனர். விவசாயிகள் சிலர் தங்கள் உடம்பில் சேற்றை பூசிக்கொண்டு ஏர் கலப்பைகளுடன் போராட்ட களத்துக்கு வந்தனர்.

பாடல்கள்

போராட்ட களத்தில் அமர்ந்திருந்த பொதுமக்கள் மத்தியில் கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் ஒவ்வொருவராக பாடல்கள் பாடியும் இயற்கை எரிவாயு எடுப்பதனால் ஏற்படும் தீங்குகள் குறித்தும், வருங்கால தலைமுறையினருக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கி பேசினர். பல்வேறு அரசியல் கட்சியினரும் நெடுவாசலுக்கு வந்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதனால் அங்கு போராட்ட களம் தீவிரம் அடைந்து நேற்று 15-வது நாளாக எழுச்சியுடன் தொடர்ந்தது. 

Next Story