திருச்சியில் இருந்து ராஜஸ்தான் ஸ்ரீ கங்காநகருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கியது பயணிகள் மகிழ்ச்சி


திருச்சியில் இருந்து ராஜஸ்தான் ஸ்ரீ கங்காநகருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கியது பயணிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 3 March 2017 4:30 AM IST (Updated: 3 March 2017 2:55 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் இருந்து ராஜஸ்தான் ஸ்ரீ கங்காநகருக்கு கண்காணிப்பு கேமராக்கள், குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கியது. புதிய ரெயில் சேவையால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருச்சி,

திருச்சியில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகருக்கு ‘ஹம்சபார்’ எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரெயில்வே கால அட்டவணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன. அதன்படி ரெயில் சேவையை கடந்த 27-ந்தேதி டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு, ஸ்ரீ கங்காநகரில் தொடங்கி வைத்தார். அங்கிருந்து புறப்பட்ட ரெயில் நேற்று காலை 7.30 மணி அளவில் திருச்சி வந்தது.

புத்தம் புது வடிவில் காணப்படும் இந்த ரெயில் முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்டவை ஆகும். மூன்றடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட 16 பெட்டிகளும், சரக்கு வேகனும், ஜெனரேட்டர் வசதி கொண்ட பெட்டி 2-ம் என மொத்தம் 18 பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

கண்காணிப்பு கேமராக்கள்

ரெயிலின் உட்புறம் மிகவும் எழில் மிகுந்து காணப்படுகிறது. மேலும் அதி நவீன வசதிகள் கொண்டதாகவும் உள்ளது. ஒரு பெட்டியில் தலா 6 கண்காணிப்பு கேமராக்கள் வீதம் 16 பெட்டிகளிலும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் ரெயிலில் திடீரென புகை ஏற்பட்டால் எச்சரிக்கும் வகையில் கருவி அனைத்து பெட்டிகளிலும் உள்ளது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் புகை அதிகமாக வந்து தீப்பிடித்தால் ரெயில் உடனடியாக தானாக நின்று விடும் வகையில் தொழில்நுட்ப வசதி பொருத்தப்பட்டுள்ளது. இதேபோல ரெயில் நின்று செல்லும் நிலையங்கள் வரும் பெட்டியினுள் மின்னணு தகவல் பலகையில் ஒளிபரப்பாகிறது. மேலும் ஒலிபெருக்கியிலும் ஒலிக்கப்படுகிறது.

இருக்கைகள் அகலமாகவும், படுக்கை விரிப்புகளும், தலையணைகளும் உள்ளன. இருக்கை எண்கள், குப்பை தொட்டி உள்பட அனைத்து இடங்களிலும் பார்வையற்றவர்களும் அறியும் வகையில் ‘பிரெய்லி’ முறையிலும் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு இருக்கையின் அருகிலும் செல்போன் சார்ஜர் ஏற்றும் வசதி உள்ளன. மேலும் கழிப்பறையில் எந்திரம் மூலம் முகச்சவரம் செய்ய ‘பிளக் பாயிண்ட்’ வசதியும் அமைக்கப்பட்டுள்ளன.

கட்டுப்பாட்டு அறை

ரெயிலில் ஜெனரேட்டர் வசதி கொண்ட பெட்டியில் தலா 500 கிலோ வாட் மின்சாரம் வினியோகம் செய்யக் கூடிய குதிரை திறன் கொண்ட 4 ஜெனரேட்டர்கள் உள்ளன. இந்த அறையின் அருகே கட்டுப்பாட்டு அறை ஒன்று தனியாகவும் உள்ளது. அதில் இளநிலை பொறியாளர் தகுதி கொண்ட ஒருவர் பணியில் உள்ளார். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவாக கூடிய காட்சிகள் கட்டுப்பாட்டு அறையில் உள்ள கணினியில் பதிவாகிறது. இதில் காட்சிகளை பார்க்க முடியாது. காட்சிகள் பதிவு செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படுகிறது.

இதேபோல பெட்டிகளில் பொருத்தப்பட்டுள்ள எச்சரிக்கை கருவி ஒலிக்கும் போது எந்த பெட்டியில் இருந்து ஒலிக்கிறது என கட்டுப்பாட்டு அறையில் ஒலிபெருக்கி கருவியில் ஒலிக்கும். இதுதவிர கூடுதல் வசதிகளும் இடம்பெற்றுள்ளன. இத்தகைய நவீன வசதிகள் கொண்ட நீண்ட தூரம் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சியில் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வியாழக்கிழமை தோறும்...

திருச்சியில் இருந்து நேற்று இரவு 11.30 மணிக்கு ஸ்ரீ கங்காநகருக்கு முதல் ரெயில் சேவை தொடங்கியது. புதிய ரெயிலை ரெயில்வே அதிகாரிகள் கொடியசைத்து வழியனுப்பி வைத்தனர். பயணிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர். வாரத்தில் வியாழக்கிழமை தோறும் திருச்சியில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை 3.15 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் ஸ்ரீ கங்காநகரில் இருந்து திங்கட்கிழமை தோறும் நள்ளிரவு 12.25 மணிக்கு (அதாவது ரெயில்வே கால அட்டவணைப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆகும்) புறப்பட்டு வியாழக்கிழமை பகல் 1.30 மணிக்கு வந்தடையும். இந்த ரெயில் கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம், ஹூப்ளி, புனே, அகமதாபாத், ஜோத்பூர் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். தமிழ்நாடு, கர்நாடகா, மராட்டியம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களை இணைக்கும் வகையில் இந்த ரெயில் இயக்கப்படுகிறது. குளிர்சாதன வசதி பெட்டி என்பதால் கட்டணம் சற்று கூடுதல் ஆகும்.

    
Location:     Tanjore    
Edition:     Nagai & Karaikal
Date :     03/03/2017
Page :     09
Stories :     6
நெடுவாசலில் 15-வது நாளாக எழுச்சி போராட்டம்
இந்திய பெண் மீது ஓடும் ரெயிலில் இனவெறி தாக்குதல்
திருச்சியில் இருந்து ராஜஸ்தான் ஸ்ரீ கங்காநகருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கியது
ரெயிலின் கூடுதல் சிறப்பம்சங்கள்
‘நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தம் எங்களுக்கு வழங்கப்படவில்லை’
எரிவாயு குழாய் பாதை திட்டத்தை ரத்து செய்யவேண்டும்
 

Next Story