நாகர்கோவில் அழகம்மன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


நாகர்கோவில் அழகம்மன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 3 March 2017 4:15 AM IST (Updated: 3 March 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாகர்கோவில்,


தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் கோவில்களில் நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் இந்த கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் மாசி பெருந்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் கொடியேற்ற நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. இதில் இந்துசமய அறநிலையத்துறை நாகர்கோவில் தொகுதி கண்காணிப்பாளர் சிவகுமார், வடிவீஸ்வரம் தேவசம் ஸ்ரீகாரியம் செந்தில்குமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தேரோட்டம்


இதைத்தொடர்ந்து மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை சமய சொற்பொழிவும், இரவு 7.30 மணி முதல் 10 மணி வரை ஆன்மிக பேருரையும், இரவு 9 மணிக்கு சுவாமியும், அம்பாளும் புஷ்பக விமானத்தில் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடந்தது.

விழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், மாலை மற்றும் இரவு நேரங்களில் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

 3–ம் நாள் திருவிழாவான நாளை (சனிக்கிழமை) இரவு 10 மணிக்கு பள்ளத்தெருவில் சுவாமியும், அம்பாளும் பூத வாகனத்தில் பவனி வருதலும், கன்னிவிநாயகர், சுப்பிரமணியசுவாமி ஆகியோர் சந்திக்கும் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

 9–ம் நாள் திருவிழாவான வருகிற 10–ந் தேதி காலை 9.15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு தேரடி திடலில் சப்தவர்ண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

10–ம் நாள் திருவிழாவான வருகிற 11–ந் தேதி இரவு 8.30 மணிக்கு சுவாமியும், அம்பாளும் ரி‌ஷப வாகனத்தில் ஆராட்டுத்துறையில் இருந்து பவனி வருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.


Next Story