போராட்டம் நடத்தப்போவதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலால் பூங்காவில் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு


போராட்டம் நடத்தப்போவதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலால் பூங்காவில் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 3 March 2017 4:30 AM IST (Updated: 3 March 2017 2:58 AM IST)
t-max-icont-min-icon

போராட்டம் நடத்தப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால் ஈரோடு வ.உ.சி. பூங்காவில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஈரோடு,


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தீவிர போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்திற்கு பொதுமக்களிடையே சிறந்த வரவேற்பு இருந்தது. ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் ஒரு வாரம் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின் முடிவில் போலீஸ் தடியடி, கல் வீச்சு, வெளிநாட்டு குளிர்பானங்களை சூறையாடுதல் என வன்முறை நடந்தது.

இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதை கண்டித்து போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. அங்கு கடந்த சில நாட்களாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போலீஸ் பாதுகாப்பு


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டத்தைபோல் இயற்கை எரிவாயு தொடர்பான பிரச்சினையிலும் தீர்வுகாண ஈரோடு வ.உ.சி. பூங்காவில் 2–ந் தேதி (நேற்று) போராட்டம் தொடங்கும் என்று வாட்ஸ்–அப், முகநூல் (பேஸ்புக்) போன்ற சமூக வலைதளங்களில் கடந்த 3 நாட்களாக தகவல் பரவியது. இதையொட்டி நேற்று காலையில் இருந்தே ஈரோடு வ.உ.சி. பூங்காவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. வ.உ.சி. பூங்கா மைதானத்தின் நுழைவு வாயில்களின் கதவு பூட்டப்பட்டது.

ஈரோடு சுவஸ்திக் கார்னரில் இருந்து பவானிரோட்டிற்கு சென்று வரும் பொதுமக்கள் வ.உ.சி. பூங்கா வழிப்பாதையை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த வழியாக பொதுமக்களை போலீசார் அனுமதிக்கவில்லை. பூங்காவிற்கு செல்பவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

காதல் ஜோடி


வ.உ.சி. பூங்காவிற்கு அருகில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. எனவே கோவிலுக்கு செல்லும் பக்தர்களை மட்டும் போலீசார் அனுமதித்தனர். அதில், இளைஞர்களாக இருந்தால் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட பிறகுதான் அனுமதிக்கப்பட்டனர். வ.உ.சி. பூங்காவிற்கு தினமும் 20–க்கும் மேற்பட்ட காதல் ஜோடிகள் செல்வது வழக்கம். அதுபோல் பூங்காவிற்கு செல்வதற்காக வந்த காதல் ஜோடிகளையும் போலீசார் நுழைவு வாயில் பகுதியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினார்கள்.

1 More update

Next Story