சுமைதூக்கும் தொழிலாளி கழுத்தை அறுத்து படுகொலை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


சுமைதூக்கும் தொழிலாளி கழுத்தை அறுத்து படுகொலை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 3 March 2017 4:30 AM IST (Updated: 3 March 2017 2:58 AM IST)
t-max-icont-min-icon

அம்மாபேட்டை அருகே சுமைதூக்கும் தொழிலாளியை கழுத்தை அறுத்து படுகொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அம்மாபேட்டை,


ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூனாட்சி முகாசிபுதூர் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் கந்தன். அவருடைய மகன் மூர்த்தி (வயது 40). சுமைதூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி செண்பகவல்லி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோவும், மகன் அம்மாபேட்டை பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 10–ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். கடந்த 8 வருடத்துக்கு முன் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு செண்பகவல்லி வீட்டை விட்டு சென்றுவிட்டார்.

அதன்பின்னர் மூர்த்தி அதே பகுதியை சேர்ந்த தனா (24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சோபியா (7) என்ற மகளும், மணிகண்டன் (4) என்ற மகனும் உள்ளனர். மூர்த்தி 2–வது திருமணம் செய்துகொண்ட பின்னர் முதல் மனைவிக்கு பிறந்த மகனும், மகளும் தாத்தா கந்தனுடன் வசித்து வருகிறார்கள்.

கழுத்தை அறுத்து கொலை


இந்தநிலையில் கடந்த 28–ந் தேதி பகல் 2 மணிஅளவில் மூர்த்தி வீட்டுக்கு வந்தார். மனைவியையும், குழந்தைகளையும் பார்த்துவிட்டு வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மூர்த்தி அடிக்கடி இப்படி வீட்டுக்கு வராமல் 2 நாட்கள் கழித்து கூட வந்துள்ளதால் தனாவும் வருவார் என்ற நம்பிக்கையில் இருந்தார். இதற்கிடையில் நேற்று காலை பூனாட்சி செம்முனீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள பொட்டல் காட்டில் ஆடு, மாடுகளை மேய்க்க சிலர் சென்றனர். அப்போது அங்கு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மூர்த்தி பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

இதையடுத்து ஈரோட்டில் இருந்து மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது மூர்த்தியின் உடலை மோப்பம் பிடித்துவிட்டு அங்கிருந்து ½ கிலோ மீட்டர் தூரம் ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. அதன்பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

போலீஸ் வலைவீச்சு


நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம நபர்கள் கத்தியால் மூர்த்தியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளார்கள். உடலுக்கு அருகிலேயே அவருடைய மோட்டார்சைக்கிளும் கிடந்தது. டிராயர், சட்டையுடன் அவர் பிணமாக கிடந்தார். யாராவது அழைத்ததின் பேரில் மூர்த்தி அங்கு சென்றபோது கொலை நடந்ததா? அல்லது அவர் மோட்டார்சைக்கிளில் சென்றபோது வழிமறித்து தாக்கி மர்ம நபர்கள் அவரை கொன்றார்களா? என்று தெரியவில்லை.

இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூர்த்தியை கழுத்தை அறுத்து கொன்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் நேற்று அம்மாபேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story