பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் தீ பிடித்து மீன் கம்பெனிகள் நாசம் 3 மீனவர்கள் மீது புகார்
ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் தெற்குகுவாடி கடற்கரையில் மீன்கம்பெனிகள் உள்ளன.
ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் தெற்குகுவாடி கடற்கரையில் மீன்கம்பெனிகள் உள்ளன. நேற்றுமுன்தினம் நள்ளிரவில் இங்குள்ள மீன்கம்பெனி ஒன்றில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இந்த தீ வேகமாக அருகில் இருந்த மீன் கம்பெனிகளுக்கும் பரவி பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் ஒன்று சேர்ந்து தீயை போராடி அணைத்தனர். இதில் பாம்பனை சேர்ந்த மரியலிடன் அருளானந்தம், தேவா, டயாஸ் உள்பட 7 பேருக்கு சொந்தமான மீன் கம்பெனிகளும் அதில் இருந்த சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்களும் எரிந்து நாசமாயின.
இதுகுறித்து பாம்பன் போலீஸ் நிலையத்தில் சிவசக்தி நகரை சேர்ந்த விசைப்படகு உரிமையாளர் மரியலிடன் புகார் செய்து மனு கொடுத்தார். அதில் தனக்கு சொந்தமான விசைப்படகில் வேலை பார்க்கும் மீனவர்கள் அந்தோணி, மதன், முத்து ஆகிய 3 பேரும் குடிபோதையில் இருந்ததால் அவர்களை கண்டித்தேன். அப்போது அவர்களுடன் தகராறு ஏற்பட்டது. அப்போது 3 பேரும் சேர்ந்து எனது இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தினர். எனது மீன்பிடி கம்பெனியை தீ வைத்து எரித்து விடுவோம் என மிரட்டியும் சென்றனர். அதேபோல் நள்ளிரவில் 3 பேரும் சேர்ந்து எனக்கு சொந்தமான மீன்கம்பெனிக்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதனால் கம்பெனியில் இருந்த மீன் பிடி வலை, இருசக்கர வாகனம் உள்ளிட்டவை எரிந்து நாசமாகிவிட்டன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த புகாரின் பேரில் பாம்பன் போலீஸ்நிலைய இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.