ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்கு


ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்கு
x
தினத்தந்தி 3 March 2017 10:45 PM GMT (Updated: 3 March 2017 4:21 PM GMT)

ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீதான புகார் குறித்து திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

ஐகோர்ட்டில் வழக்கு

திண்டுக்கல் மாவட்டம் என்.பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்த சபாபதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

எஸ்.வி.ஆர். டிராவல்ஸ், நில புரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறேன். திண்டுக்கல் ஒன்றிய அ.தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளேன். முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் கடந்த 2010–ம் ஆண்டு அறிமுகம் ஆனேன். அவருடைய அரசியல் பணிக்காகவும் தொழில் அபிவிருத்திக்காகவும் நான் அவருடன் இணைந்து பணியாற்றினேன். அவருடைய தேவைக்காக என்னிடம் பணம் வாங்கி திருப்பி கொடுத்து வந்தார். 2011–ம் ஆண்டு நத்தம் தொகுதியின் எம்.எல்.ஏ.யாக தேர்வு செய்யப்பட்டு அமைச்சர் பதவி பெற்றார்.

அதன்பின் அவருடைய செல்வாக்கு உயர்ந்ததால், நாள்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் பணப்புழக்கம் நடந்து வந்தது. அவருடைய நண்பர்கள், உறவினர்கள் என யாருக்கு பணம் தேவைப்பட்டாலும் என்னிடம் வாங்கிக் கொடுப்பார். அவரது நம்பிக்கைக்கு உரிய நபராக நான் இருந்து வந்தேன்.

ரூ.3 கோடி மோசடி

இந்தநிலையில் 2014–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது திண்டுக்கல் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருக்காக என்னிடம் பணம் வாங்கித்தான் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் செலவு செய்தார். அந்த தொகையில் ரூ.2,97,90,700–ஐ திருப்பித் தராமல் இழுத்தடித்து வருகிறார். பணத்தை திருப்பி கொடுக்குமாறு பலமுறை கேட்டும் பலனில்லை.

இந்த மோசடி குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தேன். ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தர உத்தரவிட வேண்டும்

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

பதில் அளிக்க உத்தரவு

இந்த மனு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில் இந்த மனு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தார்.


Next Story