குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 March 2017 10:15 PM GMT (Updated: 3 March 2017 5:46 PM GMT)

குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி பவானியில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பவானி நகராட்சிக்கு உட்பட்ட பகுதி காவிரி வீதி. இந்த வீதியில் 300–க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. தினமும் 2 குடம் தான் குடிநீர் கிடைத்து வந்தது.

இதனால் தங்களுக்கு குடிநீர் சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தார்கள். எனினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

சாலை மறியல்

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என பலர் ஒன்று திரண்டு பவானி கூடுதுறைக்கு செல்லும் அலங்கார நுழைவு வாயில் பகுதிக்கு நேற்று காலை 7 மணிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள பவானி–ஈரோடு ரோட்டில் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

குடிநீர் சீராக வினியோகம்

அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதிக்கு கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை. ஒரு நாளைக்கு 2 குடம் குடிநீர் தான் கிடைக்கிறது. இதை வைத்துக்கொண்டு எப்படி குடும்பத்தினர் அனைவரும் குடிக்க முடியும். மேலும் இந்த பகுதியில் பலர் குடிநீர் குழாய் இணைப்பில் முறைகேடாக மின் மோட்டாரை பொருத்தி தண்ணீரை உறிஞ்சி வருகிறார்கள். எனவே முறைகேடாக குடிநீர் உறிஞ்சுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, எங்கள் பகுதிக்கு குடிநீர் சீராக வினியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் அதிகாரிகள் கூறுகையில், ‘காவிரி வீதி பகுதியில் உள்ளவர்களுக்கு குடிநீர் சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்று தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் 7.15 மணி அளவில் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story