தமிழ்நாட்டில் விவசாயத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது திருச்சி சிவா எம்.பி. பேச்சு
தமிழ்நாட்டில், விவசாயத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது என்று திருச்சி சிவா எம்.பி. பேசினார்.
ஆறுமுகநேரி,
தமிழ்நாட்டில், விவசாயத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது என்று திருச்சி சிவா எம்.பி. பேசினார்.
தி.மு.க. பொதுக்கூட்டம்ஆறுமுகநேரி மெயின் பஜாரில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் முன்னிலை வகித்தார்.
நகர செயலாளர் ராஜசேகர் வரவேற்று பேசினார். அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி. பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:–
செயலற்ற ஆட்சிதந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் பாதையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் தொண்டாற்றி வருகிறார்.
கடந்த 5 மாதங்களாக தமிழகத்தில் அத்தியாவசிய தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாத செயலற்ற ஆட்சி நடக்கிறது. ஆனால் தி.மு.க. செயல் தலைவர் பொதுமக்களின் தேவைகளை முன்கூட்டியே சிந்தித்து செயல்படுத்தி வருகிறார்.
பாதுகாப்பு அரணாக...கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கல்விக்கு தடைக்கல்லாக விளங்கும் நீட் நுழைவுத்தேர்வில் இருந்து, தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து வலியுறுத்தினோம். ஆனால் அ.தி.மு.க.வில் 50 எம்.பி.க்கள் இருந்தாலும் அவர்களால் பிரதமரைக்கூட சந்திக்க முடியவில்லை.
ஒரு காலத்தில் தமிழகத்தில் டாக்டராக வேண்டுமெனில், அதிக மதிப்பெண்கள் பெற்று இருந்தாலும், சமஸ்கிருதம் படித்து இருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இதனை நீதி கட்சி ஆட்சியில் அகற்றினோம். தி.மு.க. ஆட்சியில் இருந்தால்தான் அனைத்து தரப்பு மக்களும் வாழ முடியும். சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக தி.மு.க. உள்ளது.
விவசாயிகளுக்கு எதிராக...உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில் 150 சதுர அடியில் ஒருவர் வீதம் வசிக்கின்றனர். ஆனால் உலக மக்கள்தொகையில் 2–வது இடத்தில் உள்ள இந்தியாவில் 50 சதுர அடியில் ஒருவர் வீதம் வசிக்கின்றனர். நிலப்பரப்பின் அளவிலும் இந்தியாவைவிட சீனா 3 மடங்கு பெரியது. எனவே நமது நாட்டில் மக்களின் தேவையை அறிந்து உணவு உற்பத்தியை பெருக்குவது அவசியம்.
ஆனால் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களையே மத்திய அரசு தொடர்ந்து திணித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் நமது நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படும். நமது உணவுக்கு பிற நாடுகளை சார்ந்து வாழ நேரிடும். எனவேதான் தமிழ்நாட்டில், விவசாயத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது என்று பிரதமரிடம் மனு கொடுத்து உள்ளோம்.
மக்கள் நலப்பணியில்...சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் வெளியிடாமல், சபை ஒத்தி வைக்கப்பட்ட பின்னர் நடந்ததை மட்டும் வெளியிடுகின்றனர். கடந்த 1994–ம் ஆண்டு ஜெயலலிதா முதல்– அமைச்சராக இருந்தபோது, எந்த பதவியிலுமே இல்லாத சசிகலாவை துணை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்து மரபை மீறவில்லையா?. அதேபோன்று முன்பு பி.எச்.பாண்டியன் சபாநாயராக இருந்தபோது, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தனபால் உள்ளிட்டவர்கள் சட்டசபையில் போராடவில்லையா?. அவை அனைத்தும் அவர்களுக்கு மறந்து விட்டதா?, இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் ஆறுமுகநேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ராகவன், முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பில்லா ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர இளைஞர் அணி செயலாளர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.