திசையன்விளை அருகே தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் அழுகிய நிலையில் பெண் பிணம்


திசையன்விளை அருகே தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் அழுகிய நிலையில் பெண் பிணம்
x
தினத்தந்தி 4 March 2017 1:00 AM IST (Updated: 4 March 2017 12:17 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை அருகே தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் அழுகிய நிலையில் பெண் பிணம் கிடந்தது.

திசையன்விளை,

திசையன்விளை அருகே தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் அழுகிய நிலையில் பெண் பிணம் கிடந்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் யார்? என்று அடையாளம் தெரிந்தது.

பெண் பிணம்

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கஸ்தூரிரெங்கபுரம்– முடவன்குளம் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான தரைமட்ட கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றுக்குள் அழுகிய நிலையில் பெண் பிணம் கிடப்பதாக அந்த பகுதியில் தகவல் பரவியது. இதுபற்றி திசையன்விளை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். திசையன்விளை தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

பிணம் மீட்பு

தீயணைப்பு வீரர்கள், அந்த கிணற்றுக்குள் இறங்கி அந்த பெண்ணின் உடலை மீட்டனர். அந்த பெண் இறந்து 20 நாட்களுக்கும் மேல் இருக்கலாம் என்று தெரிகிறது. உடல் அழுகிய நிலையில் இருந்தது.

பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விறகு சேகரிக்க சென்றவர்

விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:–

முடவன்குளம் பகுதியில் காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்தனர். அதன் அடிப்படையில் இறந்த பெண் ஆனைகுடியைச் சேர்ந்த வேலு மனைவி ஏசுவடியாள் (வயது 70) என்பது தெரிய வந்தது. வேலு இறந்த பிறகு ஏசுவடியாள், முடவன்குளத்தில் உள்ள தன்னுடைய மகள் கலைச்செல்வி வீட்டில் வசித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று விறகு சேகரிக்க சென்ற ஏசுவடியாள் கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஏசுவடியாள் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.


Next Story