நெல்லை மாவட்டத்தில் 20 சதவீதம் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன கலெக்டர் கருணாகரன் தகவல்


நெல்லை மாவட்டத்தில் 20 சதவீதம் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன கலெக்டர் கருணாகரன் தகவல்
x
தினத்தந்தி 4 March 2017 1:30 AM IST (Updated: 4 March 2017 12:27 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் 20 சதவீதம் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன என்று கலெக்டர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் 20 சதவீதம் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன என்று கலெக்டர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

கலெக்டர்– நீதிபதி ஆய்வு

சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவுப்படி, நெல்லை மாவட்டத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை கலெக்டர் கருணாகரன், நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் அவர்கள் சீமை கருவேல மரங்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அவற்றை அழிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

இதுகுறித்து கலெக்டர் கருணாகரன் கூறியதாவது:–

20 சதவீதம்

நெல்லையில் பாளையங்கால்வாய், நொச்சிகுளம், ராஜகோபாலபுரம் ஆகிய பகுதிகளில் சீமை கருவேல மரங்களை வேருடன் அகற்றும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து உள்ளோம்.

நெல்லை மாவட்டத்தில் 20 சதவீதம் சீமை கருவேல மரங்கள் வேருடன் அகற்றும் பணிகள் முடிவடைந்து இருக்கிறது. பொதுமக்கள் அனைவரும் தங்களது நிலத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை வேருடன் அகற்றி, சுற்றுப்புற சூழலை பாதுகாக்க வேண்டும். அரசு மற்றும் அரசின் சார்பு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள சீமை கருவேல மரங்களை வேருடன் அகற்றும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இலவச டெலிபோன் எண்

பொதுமக்கள் தங்களது பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை வேருடன் அகற்ற 1077 என்ற இலவச டெலிபோன் எண் மூலம் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் அளிக்கலாம். டெலிபோன் மூலம் வரும் புகார்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், நெல்லை மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சீமை கருவேல மரங்களை வேருடன் அகற்ற ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கருணாகரன் கூறினார்.

ஆய்வின் போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி பிரிவு) தண்டபாணி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் சென்றனர்.


Next Story