தேனி மாவட்ட வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு–ஆர்ப்பாட்டம்
முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேனி மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
தேனி,
முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேனி மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மேலும் தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோர்ட்டு புறக்கணிப்புதேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கேரள மாநிலம், குமுளி அருகே ஆனவச்சால் பகுதியில் கேரள வனத்துறை சார்பில் வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு வாகன நிறுத்தும் இடம் அமைக்க தமிழக விவசாயிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இந்த எதிர்ப்புகளை மீறி வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தியும் தேனி மாவட்டத்தில் வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு செய்தனர். தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம், ஆண்டிப்பட்டி, போடி, பெரியகுளம், உத்தமபாளையம் ஆகிய கோர்ட்டுகளில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்தனர்.
ஆர்ப்பாட்டம்தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்த பின்பு, கோர்ட்டு நுழைவு வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தேனி வக்கீல்கள் சங்க தலைவர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் அமைக்கப்பட்ட வாகன நிறுத்தும் இடத்தை அகற்றி, நீர்ப்பிடிப்பு பகுதியை மீட்க வேண்டும், தமிழக அரசு நீதிமன்றம் வாயிலாக வலுவான வாதத்தை எடுத்து வைத்து முல்லைப்பெரியாறு அணையில் உரிமைகளை மீட்க வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.