தோகைமலை ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


தோகைமலை ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 March 2017 10:30 PM GMT (Updated: 2017-03-04T01:26:45+05:30)

தோகைமலை ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரூர் மாவட்டம் தோகைமலை ஊராட்சி ஒன்றியம் கூடலூர் ஊராட்சி செம்பாறைகல்லுப்பட்டி, தொப்பநாயக்கன்பட்டி, பொம்மாநாயக்கன்பட்டி ஆகிய பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து, ஆழ்குழாய் கிணறு மூலம் அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் வறட்சி காரணமாக ஆழ்குழாய் கிணற்றில் குடிநீர் குறைந்து விட்டதால், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக போதிய குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து பலமுறை ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டும் குடிநீர் பற்றாக்குறையை சரி செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

சாலை மறியல்

இந்த நிலையில் குடிநீர் இல்லாததால் குறித்த நேரத்திற்கு பள்ளி, கல்லூரி மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் தோகைமலை ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பு மணப்பாறை– குளித்தலை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒன்றிய ஆணையர் மனோகர், தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது செம்பாறைகல்லுப்பட்டிக்கு புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்தும், தொப்பநாயக்கன்பட்டி மற்றும் பொம்மாநாயக்கன்பட்டி பகுதிகளுக்கு பழுதான ஆழ்குழாய் மின் மோட்டார்களை பழுது நீக்கி உடனடியாக குடிநீர் வழங்கப்படும் என்று கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் குளித்தலை– மணப்பாறை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தோகைமலையில் உள்ள விசுவ இந்து பரி‌ஷத் இயக்கத்தை சேர்ந்த தொண்டர்கள் தங்கள் கொடியுடன் சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story