திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான இடம் மீட்பு: அதிகாரிகள் நடவடிக்கை


திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான இடம் மீட்பு: அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 3 March 2017 10:45 PM GMT (Updated: 2017-03-04T01:37:30+05:30)

திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள இடம் மீட்கப்பட்டு உள்ளது. கோர்ட்டு உத்தரவு படி அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளனர்.

திருச்சி பாலக்கரை பகுதி செங்குளம் காலனியில் மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 15 ஆயிரம் சதுர அடி இடத்தில் 9 பேர் கிட்டங்கி மற்றும் கடைகளை நடத்தி வந்தனர். இவர்கள் கடந்த 2001–ம் ஆண்டு கடைகளுக்கு வாடகை உயர்த்தப்பட்டபோது, அதனை செலுத்தாமல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை திருச்சி கோர்ட்டு தள்ளுபடி செய்து குத்தகைதாரர்கள் நிலுவை தொகையை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.


அதிகாரிகள் நடவடிக்கை

ஆனால் குத்தகைதாரர்கள் உயர்த்தப்பட்ட வாடகை மற்றும் நிலுவை தொகையை செலுத்தாமல் இருந்து வந்ததால் கோர்ட்டு உத்தரவுப்படி ரூ.5 கோடி மதிப்புள்ள அந்த இடத்தை மீட்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவுப்படி உதவி ஆணையர்கள் பத்மாவதி, ரெங்கநராஜன், பழ.சுப்பிரமணியன் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் நேற்று குறிப்பிட்ட அந்த பகுதிக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர். அங்கு வாடகை மற்றும் நிலுவை தொகை செலுத்தாத 9 குத்தகைதாரர்களின் கடைகளையும் பூட்டி சீல் வைத்து விட்டு சென்றனர்.


Next Story