ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 March 2017 10:30 PM GMT (Updated: 2017-03-04T02:09:08+05:30)

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் கிராம மக்கள், மாணவர்கள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் காரைக் காலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. சார்பில் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாநில அமைப்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான தன்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தேவமணி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். லேசான மழை பெய்த போதும் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது.

பா.ம.க. எதிர்க்கும்

பின்னர் நிருபர்களிடம் பா.ம.க. புதுச்சேரி மாநில அமைப்பாளர் தன்ராஜ் கூறுகையில், ‘புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடுவதாக அறிவிக்க வேண்டும்.

புதுவை மாநிலத்தின் நெற் களஞ்சியமாக விளங்கும் காரைக்கால் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும். விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டத்தை காரைக்கால் மாவட்டத்தில் செயல்படுத்தினாலும் அதனை பா.ம.க. கடுமையாக எதிர்க்கும்’ என்றார். 

Next Story