புதுவையில் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான பயிற்சி டாக்டர்கள், கல்லூரி மாணவர்கள்


புதுவையில் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான பயிற்சி டாக்டர்கள், கல்லூரி மாணவர்கள்
x
தினத்தந்தி 3 March 2017 9:00 PM GMT (Updated: 3 March 2017 8:39 PM GMT)

புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்றதாக கைதானவர்களிடம் போலீசார் விசாரித்ததில், பயிற்சி டாக்டர்கள், கல்லூரி மாணவர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகி இருந்த தகவல் கிடைத்தது.

புதுவை மாநிலம் அரியாங்குப்பம் அங்காளம்மன் கோவில் தெரு, புதுக்குளம், அந்தோணியார் கோவில் தெரு, அரியாங்குப்பம் ஆற்றங்கரை ஆகிய பகுதிகளில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக அரியாங்குப்பம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது சில செடிகளை பறித்து ஆய்வுக்காக எடுத்துச்சென்றனர். ஆய்வு முடிவில் அவை கஞ்சா செடிகள்தான் என்பது உறுதி ஆனது.

இதுதொடர்பாக புதுக்குளம் பகுதியில் இருந்த குணசேகரன் (வயது 27) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணமாக பதில் கூறினார். இதையடுத்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர், பல பேர் மூலம் விற்பனைக்காக கஞ்சா சப்ளை செய்ததை ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து குணசேகரனை போலீசார் கைது செய்தனர்.

கல்லூரி மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள்

அவர் கொடுத்த தகவலின்பேரில் புதுவை பெரியார் நகரை சேர்ந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் புதுச்சேரி நெல்லித்தோப்பு அருகே உள்ள பெரியார் நகரைச் சேர்ந்த அரவிந்த் (23), கமல் என்ற பிரவீன்குமார் (19) என்பது தெரியவந்தது.

இவர்களில் அரவிந்த் கஞ்சா விற்பனையில் முக்கிய நபராக செயல்பட்டு வந்துள்ளார். இவர்களிடம் இருந்து கைப்பற்றிய 2 செல்போன்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கல்லூரி மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள், ஒரு சில அரசு ஊழியர்களின் செல்போன் நம்பர்கள் அதில் பதிவு செய்யப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் கஞ்சா வியாபாரிகளின் முக்கிய வாடிக்கையாளர்களாக இருந்துள்ளனர்.

கஞ்சா பழக்கத்துக்கு இவர்கள் அடிமையாக இருந்ததை அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து அரவிந்த் மற்றும் பிரவீன்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள், 4 ஆயிரம் ரூபாய் ரொக்கம், கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கஞ்சா கேட்டு வந்த செல்போன் அழைப்புகள்

புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்றதாக பிடிபட்ட 3 பேரிடம் போலீசார் அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது அவர்களிடம் இருந்த செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து வைத்து இருந்தனர்.

தொடர்ந்து போலீசார் விசாரித்துக் கொண்டு இருந்த நேரத்தில், அந்த செல்போன்களுக்கு தொடர்ச்சியாக அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. செல்போன்களில் தொடர்பு கொண்டவர்களுடன் அந்த வாலிபர்களை விட்டே போலீசார் பேச வைத்தனர். போனில் பேசிய அனைவரும் கஞ்சா பொட்டலம் கேட்டே தொடர்பு கொண்டது தெரியவந்தது. இது போலீசாரையே அதிர்ச்சி அடைய வைத்தது.

அதுகுறித்து போலீசார் கஞ்சா விற்ற வாலிபர்களிடம் விசாரித்தபோது, போனில் பேசி கஞ்சா பொட்டலம் கேட்டவர்கள் எல்லோரும் தங்கள் வாடிக்கையாளர்கள். அவர்கள் ரெகுலராக கஞ்சா வாங்குபவர்கள் என்று போலீசாரிடம் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து 15–க்கும் மேற்பட்ட கஞ்சா வாடிக்கையாளர்களை அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து போலீசார் விசாரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story