மைசூருவில் பொதுப்பணித்துறை என்ஜினீயர் வீட்டில் ஊழல் தடுப்பு படையினர் சோதனை சொத்து ஆவணங்கள், நகைகள் பறிமுதல்


மைசூருவில் பொதுப்பணித்துறை என்ஜினீயர் வீட்டில் ஊழல் தடுப்பு படையினர் சோதனை சொத்து ஆவணங்கள், நகைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 4 March 2017 2:27 AM IST (Updated: 4 March 2017 2:27 AM IST)
t-max-icont-min-icon

மைசூருவில், பொதுப்பணித்துறை என்ஜினீயர் வீட்டில் ஊழல் தடுப்பு படையினர் நேற்று திடீரென சோதனை நடத்தினர்.

மைசூரு,

மைசூருவில், பொதுப்பணித்துறை என்ஜினீயர் வீட்டில் ஊழல் தடுப்பு படையினர் நேற்று திடீரென சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்கள், நகைகள் ஆகியவற்றை ஊழல் தடுப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

ஊழல் தடுப்பு படையினர் சோதனை

மைசூரு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருபவர் ரங்கநாத் நாயக். இவர் தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்த புகார்கள் ஊழல் தடுப்பு படையினருக்கு சென்றன. அதன்பேரில் நேற்று காலையில் திடீரென ஊழல் தடுப்பு படை போலீஸ் சூப்பிரண்டு கவிதா தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டு கஜேந்திர பிரசாத் மற்றும் போலீசார் மைசூரு விஜயநகரில் உள்ள என்ஜினீயர் ரங்கநாத் நாயக்கின் வீட்டிற்கு சென்றனர்.

பின்னர் அதிரடியாக அவர்கள் ரங்கநாத் நாயக்கின் வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தினர். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது தெரியவந்தது. அவருக்கு மைசூருவில் ஒரு பங்களா, தோட்டங்கள், பெங்களூருவில் ஒரு பங்களா மற்றும் நகைகள் என ரூ.2 கோடிக்கும் அதிகமான சொத்துகள் இருப்பது உறுதியானது. அதற்கான கணக்கு விவரங்கள் அவரிடம் இல்லை.

சொத்து ஆவணங்கள் பறிமுதல்

இதையடுத்து ஊழல் தடுப்பு படை போலீசார் ரங்கநாத் நாயக்கின் வீட்டில் இருந்து சொத்து ஆவணங்கள், நகைகள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ரங்கநாத் நாயக் மீது ஊழல் தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொதுப்பணித்துறை ரங்கநாத் நாயக்கின் வீட்டில் ஊழல் தடுப்பு படை போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்திய சம்பவம் நேற்று மைசூருவில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story