தாம்பரம் விமானப்படை தளத்தை மேலும் விரிவாக்க நிலம் வேண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கை


தாம்பரம் விமானப்படை தளத்தை மேலும் விரிவாக்க நிலம் வேண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 3 March 2017 10:06 PM GMT (Updated: 2017-03-04T03:35:33+05:30)

தாம்பரம் விமானப்படை தளத்தை மேலும் விரிவாக்கம் செய்வதற்கு 54 ஏக்கர் நிலம் கேட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தாம்பரம் விமானப்படை தளத்தை மேலும் விரிவாக்கம் செய்வதற்கு 54 ஏக்கர் நிலம் கேட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விமானப்படை தளம்

தாம்பரம் விமானப்படை தளத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்திய விமானப் படையின் மூத்த தளபதி ஏர் மார்ஷல் பி.எஸ்.தனோவா பங்கேற்றார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- தஞ்சாவூரில் விமானப்படை தளம் அமைக்கும் பணி எந்த அளவில் உள்ளது?

பதில்:- தற்போது உட்கட்டமைப்பை அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இவை முழுமை அடைந்து 2 அல்லது 3 ஆண்டுகளில் தஞ்சாவூர் விமானப்படை தளம் செயல்பாட்டுக்கு வரும்.

உதிரிபாகம்

கேள்வி:- மிக் 21 ரக விமானங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் தற்போது கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே விமானப்படை விமானங்கள், ஹெலிகாப்டர்களுக்கான உதிரிபாகங்கள் எப்படி கொள்முதல் செய்யப்படுகின்றன?

பதில்:- உதிரிபாகங்கள் பெறுவதில் தற்போது பிரச்சினை எழவில்லை. இந்தியாவிலும் உதிரிபாக உற்பத்தி நடைபெறுகிறது. விமானப்படை விமானங்களுக்கான உதிரிபாக உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடையும்.

அரசுக்கு கோரிக்கை

கேள்வி:- பிரான்ஸ் நாட்டுடனான ஒப்பந்தப்படி இந்தியாவுக்கு ரபேல் போர் விமானங்கள் எப்போது வரும்?

பதில்:- 2019-ம் ஆண்டில் விமானப் படையில் அவை சேர்க்கப்படும்.

கேள்வி:- தாம்பரம் விமானப்படை தளத்தில் மேலும் பல பிரிவுகள் வர வாய்ப்புள்ளதா?

பதில்:- சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது தாம்பரம் விமான படைத்தளம் பாதிப்பு அடையாததால் அதன் விமான ஓடுதளத்தை பயன்படுத்த முடிந்தது. ஓடுதளத்தை விரிவுபடுத்த 54 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. அதுகுறித்து தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெண் விமானிகள்

கேள்வி:- விமானப் படையில் பெண்கள் அதிகம் இல்லையே?

பதில்:- 1991-ம் ஆண்டில் இருந்து விமானப் படையில் பெண்கள் சேர்க்கப்படுகின்றனர். இங்குள்ள பணி, ஆண், பெண் என்ற அளவில் அமையவில்லை. தகுதி மட்டும்தான் இங்கு எதிர்பார்க்கப்படுகிறது. போர் விமானங்களை ஓட்டுவது ஆணா, பெண்ணா என்பதெல்லாம் அந்த விமானத்துக்குத் தெரியாது. தற்போது 197 பெண் விமானிகளில் 3 பேர் முதிர்ச்சி பெற்ற விமானியாக உள்ளனர்.

காணாமல்போன விமானம்

கேள்வி:- சென்னை அருகே கடலில் மூழ்கிய ஏ.என் 32 ரக விமானத்தை கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கு என்ன காரணம்?

பதில்:- இதைவிட அதிநவீன தொழில்நுட்ப வசதியுள்ள மலேசிய விமானமும் கடலில் மூழ்கிய பின்னர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஏ.என். 32 ரக விமானத்தை தேடும்போது அனைத்து நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டன. பரந்து விரிந்துள்ள கடலில் அடியில் நடத்தப்பட்ட தேடுதல் பணி ஓரளவுக்குமேல் பலனளிக்கவில்லை. விபத்துக்கான காரணமும் கண்டறியப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story