மாவட்டத்தில் 8 இடங்களில் கால்நடைகளுக்கான உலர் தீவன கிடங்கு கலெக்டர் தகவல்


மாவட்டத்தில் 8 இடங்களில் கால்நடைகளுக்கான உலர் தீவன கிடங்கு கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 10 March 2017 10:45 PM GMT (Updated: 2017-03-10T18:56:13+05:30)

சிவகங்கை மாவட்டத்தில் 8 இடங்களில் வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு மானிய விலையில் தீவனம் வழங்க

சிவகங்கை,

தீவன கிடங்கு

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

வறட்சி காரணமாக கால்நடைகளுக்கு தீவனம் கிடைக்காமல் கால்நடைகள் பாதிக்கப்படுவதை தடுக்க வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு சார்பில் உலர் தீவன கிடங்கு அமைத்து மானிய விலையில் கால்நடைகளுக்கான தீவனம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காளையார்கோவில், திருப்புவனம், இளையான்குடி, கல்லல், தேவகோட்டை, திருப்பத்தூர் கால்நடை மருத்துவமனை மற்றும் புழுதிப்பட்டி கால்நடை மருந்தகம் ஆகியவற்றில் உலர் தீவன கிடங்குகளை மாவட்ட நிர்வாகம் நிறுவி உள்ளது.

மானிய விலையில்...

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி நிலை சீராகும் வரை ஒரு கால்நடைக்கு தினமும் 3 கிலோ வீதம் அதிகபட்சமாக 5 கால்நடைகளுக்கு ஒரு வாரத்திற்கு 105 கிலோ வரை கால்நடைகளை வளர்த்து வரும் ஒருவருக்கு உலர் தீவனம் மானிய விலையில் கிலோ ஒன்றிற்கு ரூ.2 வீதம் வழங்கப்படுகிறது.

எனவே, கால்நடை வளர்ப்போர் தங்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் உலர் தீவனக் கிடங்கு அமைந்துள்ள பகுதியில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை நேரில் அணுகி பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story