ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து வருகிற 18–ந் தேதி நடைபெறும் மாநிலக்குழு கூட்டத்தில் முடிவு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி


ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து வருகிற 18–ந் தேதி நடைபெறும் மாநிலக்குழு கூட்டத்தில் முடிவு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 10 March 2017 11:00 PM GMT (Updated: 10 March 2017 1:26 PM GMT)

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து வருகிற 18–ந் தேதி சென்னையில் நடைபெறும்

சிவகங்கை,

பேட்டி

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சிவகங்கையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிப்பட தெரிவித்துள்ளதை வரவேற்கிறோம். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை கடற்படையினரால் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். இலங்கை கடற்படையினரால் இதுவரை 563 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ரூ.25 லட்சம் இழப்பீடு

தமிழக மீனவர்களின் உயிர், உடமை, தொழில் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு இல்லை. 130–க்கும் அதிகமான படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்து வைத்துள்ளது. தமிழக மீனவர்களை இந்திய குடிமகன்களாக மத்திய அரசு கருதுவதாக தெரியவில்லை. இலங்கைக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்ட ராமேசுவரம் மீனவர் பிரிட்ஜோ குடும்பத்திற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த தொகையை இலங்கை அரசிடம் இருந்து வசூலிக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்த வரை பெரும்பாலான அணைகள் பிற மாநிலத்தை நம்பியே அமைந்துள்ளன. அனைத்து மாநிலங்களிலும் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. ஆனால், இதை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த பிரச்சினையில் மத்திய அரசு பாராமுகத்துடன் செயல்படுகிறது.

ரெயில் மறியல் போராட்டம்

கேரள அரசு பவானி ஆற்றில் தடுப்பணை கட்டுவதை கண்டித்து வருகிற 12–ந் தேதி கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள வறட்சி நிவாரணத்தை சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் வழங்கி அவர்களது முழு பயிர்க்கடனையும் ரத்து செய்ய வேண்டும்.

கடந்த ஆண்டு வழங்க வேண்டிய பயிர் இழப்பீட்டு தொகை இதுவரை வழங்கப்படவில்லை. அதையும் உடனடியாக வழங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகையை தனியார் கரும்பு ஆலைகள் உடனடியாக வழங்க வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்ட வறட்சி நிவாரணத்தில் விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரணம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. விவசாய தொழிலாளர்களுக்கும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.

மாநிலக்குழு கூட்டத்தில் முடிவு

தேசிய வேலை உறுதி திட்டத்தில் வழங்கப்படும் தினக்கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு பல இடங்களில் கடந்த 3 மாதங்களாக கூலி வழங்கப்படவில்லை. அதையும் உடனடியாக வழங்க வேண்டும்.

ரே‌ஷன் கடைகளில் அரிசியை தவிர வேறு எந்த பொருட்களும் தற்போது இருப்பில் இல்லை. அனைத்து பொருட்களும் ரே‌ஷன் கடையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடுவது குறித்து வருகிற 18–ந் தேதி சென்னையில் நடைபெறும் மாநிலக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, அதன் பின்னர் மக்கள் நலக்கூட்டணியுடன் கலந்து ஆலோசித்து எங்கள் முடிவை தெரிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட செயலாளர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் சந்திரன், ராஜேஷ்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story