தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 413 பேர் உயிரிழப்பு கருத்தரங்கில் கலெக்டர் அண்ணாதுரை தகவல்


தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 413 பேர் உயிரிழப்பு கருத்தரங்கில் கலெக்டர் அண்ணாதுரை தகவல்
x
தினத்தந்தி 10 March 2017 10:45 PM GMT (Updated: 2017-03-10T19:32:34+05:30)

தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 413 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கருத்தரங்கில் கலெக்டர் அண்ணாதுரை கூறினார்.

தஞ்சாவூர்,

சாலை பாதுகாப்பு கருத்தரங்கம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் போக்குவரத்துத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு கருத்தரங்கம் நடந்தது. இதனை தொடங்கிவைத்து கலெக்டர் அண்ணாதுரை பேசியதாவது:–

சாலையில் செல்லும் போது நீங்கள் முதலில் செல்லுங்கள் என சாலையில் பயணிக்கும் ஒவ்வொருவரும் நினைத்து மற்றவர்களுக்கு முதலில் செல்ல வழிவகுத்தால் விபத்துகளை தவிர்க்கலாம். சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொது மக்கள், மாணவ– மாணவிகள் அறியும் பொருட்டு பல்வேறு வகையான பேரணிகள், பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து சாலைவிதிகளை பின்பற்றினால் விலை மதிப்பற்ற உயிர்களை காப்பாற்றலாம்.

413 பேர் பலி

தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 413 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1,867 விபத்துகள் இருசக்கர வாகனங்களாலும், 63 விபத்துகள் 3 சக்கர வாகனங்களாலும், கார் போன்ற 4 சக்கர வாகனங்களால் 166 விபத்துகளும், கனரக லாரி போன்ற வாகனங்களில் 206 விபத்துகளும், பஸ்களில் 265 விபத்துகளும், டிராக்டரில் 6 விபத்துகளும் நடைபெற்றுள்ளன.

இது போன்ற விபத்துகளை தவிர்க்க பஸ் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். இரு சக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணிவதையும், நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுபவரும், முன் இருக்கையில் அமர்ந்திருப்பவரும், சீட்பெல்ட் அணிவதையும் வழக்கமாக கொள்ள வேண்டும். செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது மற்றும் பாடல்கள் கேட்டுக்கொண்டு வாகனம் ஓட்டுவதையும் தவிர்க்க வேண்டும். அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்திரசேகரன், போக்குவரத்துத்துறை இணை ஆணையர் பாலன், துணைஆணையர் சிவக்குமார், வட்டாரபோக்குவரத்து அதிகாரி ராஜ்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஜயகுமார், பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story