ஏற்காட்டில் கனமழையால் மின்சாரம் துண்டிப்பு: 67 கிராமங்கள் இருளில் மூழ்கின தேவூரில் 10 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன


ஏற்காட்டில் கனமழையால் மின்சாரம் துண்டிப்பு: 67 கிராமங்கள் இருளில் மூழ்கின தேவூரில் 10 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன
x
தினத்தந்தி 10 March 2017 11:30 PM GMT (Updated: 2017-03-10T19:55:40+05:30)

ஏற்காட்டில் விடிய, விடிய பெய்த கனமழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

சேலம்,

ஏற்காட்டில் பலத்த மழை

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் இரவு 11 மணி முதல் இடி–மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை விடிய, விடிய பெய்தது. நேற்று அதிகாலை 4 மணி வரை இந்த மழை நீடித்தது. பின்னர் லேசான சாரல் மழையாக பெய்து கொண்டிருந்தது. இதனால் ஏற்காடு முழுவதுமே குளுகுளு சீசன் காணப்படுகிறது.

இந்த மழையினால் தண்ணீர் குறைவாக காணப்பட்ட படகு இல்ல ஏரியில் நீர்மட்டம் உயரத் தொடங்கி உள்ளது. கிணறுகளிலும் நீர்மட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. இந்த மழையால் சுற்றுலா பயணிகள், காப்பித்தோட்ட உரிமையாளர்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் குளுகுளு சீசனால் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருளில் மூழ்கின

ஏற்காட்டில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக ஏற்காடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, 67 மலைக்கிராமங்கள் இருளில் மூழ்கின.

நேற்று காலை 5 மணியளவில் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது. இதற்கிடையில் நேற்றும் மதியம் 2 மணி முதல் ஏற்காட்டில் மழை பெய்தது.

கொட்டகை சரிந்தது

எடப்பாடியை அடுத்த இருப்பாளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறைகாற்றுடன் கனமழை பெய்தது. இருப்பாளியை அடுத்த அம்மன் கோவில்காடு பகுதியில் முத்துக்கருப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் அட்டை கொட்டகை அமைத்து குடியிருந்து வந்தார். இந்த கொட்டகையில் அவரும் அவரது மகன்கள் ரவிசங்கர், தீபக்குமார் ஆகியோர் படுத்திருந்தனர். முன்பகுதியில் மாடுகளை கட்டி வைத்திருந்தனர். திடீரென அடித்த சூறைக்காற்றில் கொட்டகை சரிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மூவரும் உயிர் தப்பினர். மாடுகளின் மீது கொட்டகை சரிந்ததால் மாடுகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் பக்கத்தில் பயிரிட்டிருந்த வாழை மரங்களும் சாய்ந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த எடப்பாடி தாசில்தார் சண்முகவள்ளி, வருவாய் அலுவலர் கேசவன், கிராம நிர்வாக அலுவலர் சுகுணா, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சரஸ்வதி ராசு ஆகியோர் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணபொருட்கள் மற்றும் அரசின் நிதிஉதவியை வழங்கினார்கள்.

வாழைகள் சாய்ந்தன

தேவூர் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் தேவூர் அருகே காவேரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த 4 விவசாயிகளின் தோட்டங்களில் 3,054 வாழை மரங்களும், கோனேரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த 4 விவசாயிகளின் தோட்டங்களில் 5,330 வாழைகளும், அரசிராமணி பிட்–1 பகுதியில் ஒரு விவசாயியின் தோட்டத்தில் 675 வாழைகளும், கோனேரிப்பட்டி அக்ரஹாரம் பகுதியில் ஒரு விவசாயியின் தோட்டத்தில் 960 வாழைகள் என தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் மொத்தம் 10,019 வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த சங்ககிரி உதவி கலெக்டர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தேவூர் வருவாய் ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மழையினால் சாய்ந்த வாழை மரங்களை நேரில் பர்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

வீரபாண்டி பகுதியில் பெய்த பலத்த மழையால் வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சக்தி வினாயகர் பீடத்தின் அருகே இருந்த அரச மரத்தின் ஒரு பகுதி ஒடிந்து கீழே விழுந்தது. ஆனால் பீடத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.

பொதுமக்கள் மகிழ்ச்சி

இதேபோல வாழப்பாடி, கெங்கவல்லி, காடையாம்பட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் நல்ல மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:–

ஏற்காடு – 31.8, எடப்பாடி – 18, வாழப்பாடி – 8.5, கெங்கவல்லி – 8.2, காடையாம்பட்டி – 7.


Next Story