சேலத்தில் எம்.ஜி.ஆர்.–அம்மா–தீபா பேரவை புதிய நிர்வாகிகளுக்கான விருப்பமனு பெறும் நிகழ்ச்சியில் திடீர் மோதல் ஒருவர் தாக்கப்பட்டதால் பரபரப்பு


சேலத்தில் எம்.ஜி.ஆர்.–அம்மா–தீபா பேரவை புதிய நிர்வாகிகளுக்கான விருப்பமனு பெறும் நிகழ்ச்சியில் திடீர் மோதல் ஒருவர் தாக்கப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 March 2017 11:30 PM GMT (Updated: 10 March 2017 2:29 PM GMT)

சேலத்தில் நடந்த எம்.ஜி.ஆர்.–அம்மா–தீபா பேரவை புதிய நிர்வாகிகளுக்கான விருப்பமனு

சேலம்,

விருப்பமனு பெறும் நிகழ்ச்சி

எம்.ஜி.ஆர்.–அம்மா–தீபா பேரவையில் மாவட்டம் வாரியாக புதிய நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக விருப்பமனு பெறும் பணிகள் தொடங்கி உள்ளது. அதன்படி, புதிய நிர்வாகிகளுக்கான விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நேற்று சேலம் 4 ரோடு அருகே உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது.

இதில், மண்டல பொறுப்பாளர்களான முன்னாள் எம்.பி. அர்ச்சுனன், ராஜூ, செல்ல.ராசாமணி, முன்னாள் எம்.எல்.ஏ.க்களான சரஸ்வதி, கிருஷ்ணகுமார் மற்றும் கருப்பசாமி, செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவர்கள், நிர்வாகிகளாக விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றனர். இதில் ஜெ.தீபா பேரவையினர் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மோதல்

இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது புறநகர் மாவட்ட தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்தார். பின்னர் அவர், மண்டல பொறுப்பாளர்களை சந்தித்து, ‘மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர் ஆகிய பொறுப்புகளுக்கு மட்டும் விருப்ப மனு பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது இங்கு ஒன்றியம், பேரூராட்சி, கிளை நிர்வாகிகளுக்கான விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முன்னதாக இதுகுறித்து என்னிடம் தகவல் தெரிவித்திருந்தால், கூடுதலாக ஆதரவாளர்களை அழைத்து வந்திருப்பேன்’ என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக மண்டல பொறுப்பாளர்களுக்கும், ராஜ்குமார் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் திடீரென இது மோதலாக மாறியது. அப்போது ராஜ்குமார் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்து ராஜ்குமார் தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.

தீபாவிடம் முறையிடுவோம்

இதுகுறித்து ராஜ்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘தீபா பேரவையை சேலம் புறநகரில் நாங்கள் தான் முதலில் தொடங்கினோம். ஆனால் தற்போது மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகளாக யார், யாரையோ நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக நான் விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சியில் மண்டல பொறுப்பாளர்களிடம் கேட்டேன். அப்போது என்னை முன்னாள் எம்.பி. அர்ச்சுனன் கன்னத்தில் அடித்து விட்டார். இதனால் அங்கிருந்து நாங்கள் வெளியேறி விட்டோம். இதுகுறித்து பொதுச்செயலாளர் ஜெ.தீபாவிடம் முறையிடுவோம்’ என்றார்.

இதுதொடர்பாக மண்டல பொறுப்பாளர் செல்ல.ராசாமணி கூறும்போது, ‘மண்டல பொறுப்பாளர்களான நாங்கள் தமிழகத்தை 4 மண்டலமாக பிரித்து புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க ஜெ.தீபா பேரவையினர் மற்றும் ஆதரவாளர்களிடம் இருந்து விருப்ப மனு பெறுகிறோம். சேலத்தில் நடந்த விருப்பமனு பெறும் நிகழ்ச்சியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனால் இதில் யாரும் தாக்கப்படவில்லை’ என்றார்.


Next Story