குடிநீர் வினியோகம் செய்ய கோரி அந்தியூர் வட்டார வளர்ச்சி அதிகாரியை பொதுமக்கள் முற்றுகை


குடிநீர் வினியோகம் செய்ய கோரி அந்தியூர் வட்டார வளர்ச்சி அதிகாரியை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 10 March 2017 10:45 PM GMT (Updated: 2017-03-11T00:16:11+05:30)

குடிநீர் வினியோகம் செய்ய கோரி அந்தியூர் வட்டார வளர்ச்சி அதிகாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் குப்பாண்டம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதி கரட்டூர். இந்த பகுதியில் 250–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ளவர்களுக்கு 2 ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதற்காக பொருத்தப்பட்ட 2 மோட்டார்களிலும் பழுது ஏற்பட்டுவிட்டது. இதனால் கடந்த ஒரு மாதமாக இங்குள்ளவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

முற்றுகை

இந்த நிலையில் கரட்டூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு நேற்று பகல் 11 மணிக்கு வந்தனர். அப்போது அலுவலகத்தில் உள்ள தனது அறையில் வட்டார வளர்ச்சி அதிகாரி சுந்தர் பணியாற்றி கொண்டிருந்தார். உடனே பொதுமக்கள் நேராக வட்டார வளர்ச்சி அதிகாரியின் அறைக்கு சென்று தங்களுக்கு உடனே குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அவரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் கரட்டூர் பகுதியை சேர்ந்த 100 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி திட்ட தொழிலாளர்கள் பலர் தங்களுக்கு கடந்த 11 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. எனவே தங்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வேலைவாய்ப்பு உறுதி திட்ட தொழிலாளர்களும் வட்டார வளர்ச்சி அதிகாரியை முற்றுகையிட்டனர். அதுமட்டுமின்றி உடனடி தீர்வு கிடைக்கும் வரை இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என்று அலுவலகத்தின் தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் வட்டார வளர்ச்சி அதிகாரி சுந்தர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்களிடம் வட்டார வளர்ச்சி அதிகாரி கூறுகையில், ‘கரட்டூர் பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணற்றுக்கு புதிய மோட்டார் பொருத்தப்பட்டு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யப்படும். 100 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்று தெரிவித்தார்.

இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களுடைய முற்றுகை மற்றும் தர்ணா போராட்டத்தை கைவிட்டு மதியம் 12 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story