திண்டுக்கல் அருகே மொபட்–மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல், 3 பேர் பலி


திண்டுக்கல் அருகே மொபட்–மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல், 3 பேர் பலி
x
தினத்தந்தி 10 March 2017 10:30 PM GMT (Updated: 10 March 2017 7:07 PM GMT)

திண்டுக்கல் அருகே நடந்த விபத்தில் மொபட்–மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியது. இதில் 3 பேர் பலியானார்கள்.

திண்டுக்கல்

திண்டுக்கல் பஸ்நிலையத்தில் இருந்து தேனி வழியாக போடி செல்லும் தனியார் பஸ் நேற்று மதியம் புறப்பட்டது. அந்த பஸ்சை சின்னமனூரை சேர்ந்த பாண்டி என்பவர் ஓட்டினார். திண்டுக்கல் நகரை கடந்து, வத்தலக்குண்டு பைபாஸ் சாலையில் பஸ் சென்று கொண்டு இருந்தது.

அப்போது, திடீரென ஒரு மொபட் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பஸ் டிரைவர் உடனே பிரேக் போட்டார். மேலும், பஸ்சை வலதுபுறமாக திருப்பினார். ஆனால், பஸ் நிற்காமல் சாலையில் சக்கரம் உரசியபடியே சென்று மொபட் மீது பயங்கரமாக மோதியது.

இதுமட்டுமின்றி அடுத்து வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீதும் பஸ் மோதியது. அந்த மோட்டார் சைக்கிள், பஸ்சின் முன்பக்க சக்கரத்தில் சிக்கிக் கொண்டது. சில மீட்டர் தூரம் சென்ற பிறகு, பஸ்சின் வேகம் கட்டுக்குள் வந்து, சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் இறங்கி நின்றது.

3 பேர் பலி

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் அப்பளம் போல நொறுங்கியது. பஸ்சின் முன்பக்க கண்ணாடியும் உடைந்து சிதறியது. மேலும் மொபட்டில் வந்தவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதேபோல, பஸ் சக்கரத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்திருந்தனர். அவர்களும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்–இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர், இறந்த 3 பேரின் உடல்களையும், பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

டிரைவர் கைது

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் பாண்டியை கைது செய்தனர். மேலும் போலீசார் விசாரணையில் மொபட்டில் வந்தவர், பஞ்சம்பட்டியை சேர்ந்த கண்ணதாசன் (வயது 38) என்று தெரியவந்தது. அவர், தனது மொபட்டுக்கு பெட்ரோல் நிரப்புவதற்கு வந்தபோது விபத்தில் சிக்கி பலியாகி இருக்கிறார்.

இதேபோல் மோட்டார் சைக்கிளில் வந்து உயிரிழந்தவர்கள் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்த டிராக்டர் டிரைவர் முருகன் (36), விவசாயி முருகேசன் (53) என்பது தெரியவந்தது. அய்யம்பாளையத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு டிராக்டர் டயர் வாங்க வந்தபோது, விபத்தில் சிக்கி அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

உறவினர்கள் கதறல்

விபத்தில் 3 பேர் இறந்த தகவல் அறிந்ததும், இறந்தவர்களின் உறவினர்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். சாலையில் படிந்திருந்த ரத்தக்கறை, அப்பளம் போல நொறுங்கிய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பார்த்து கதறி அழுதனர். பிறகு, அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவர்களின் உடல்களை பார்த்து கதறினர். இது, அங்கிருந்தவர்களின் கண்களையும் கலங்க வைத்தது.

திண்டுக்கல்–வத்தலக்குண்டு சாலையில் பஞ்சம்பட்டி பிரிவு, பித்தளைப்பட்டி பிரிவு போன்ற இடங்களில் பஸ்கள் அதிவேகத்தில் செல்வதால் விபத்துகள் தொடர்ந்து நடக்கின்றன. இதனால் உயிர் பலியும் அதிகரித்து வருகிறது. இனி இதுபோன்ற விபத்துகள் அரங்கேறாமல் இருக்க பஸ்களின் வேகத்துக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டியதும், அதை கண்காணிக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம் ஆகி இருக்கிறது.


Next Story