நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்படும், வானதிசீனிவாசன் பேச்சு


நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்படும், வானதிசீனிவாசன் பேச்சு
x
தினத்தந்தி 10 March 2017 11:00 PM GMT (Updated: 10 March 2017 7:34 PM GMT)

நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்படும், பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன்

பேரூர்

நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்படும் என்று தாகம் தீர்க்கும் யாத்திரையின் போது பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் பேசினார்.

தாகம் தீர்க்கும் யாத்திரை

கோவை மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் தாமரையின் தாகம் தீர்க்கும் யாத்திரை என்ற பெயரில் நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசார பயணம் கோவையை அடுத்த பூண்டி அடிவாரத்தில் இருந்து நேற்றுக்காலை தொடங்கியது. இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஏ.லட்சுமணன் முன்னிலை வகித்தார். யாத்திரையை முன்னாள் மத்திய மந்திரி நெப்போலியன் கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசினார். தாகம் தீர்க்கும் யாத்திரைக்கு பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமை தாங்கி பேசியதாவது:–

தமிழகத்தில் 50 ஆண்டுகளாக கழகங்களின் ஆட்சியில் நீர்நிலைகள் பாழ்படுத்தப்பட்டன. நீர்மேலாண்மை மிகவும் பாதிக்கப்பட்டு விட்டது. இதனால் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. சிறுவாணி அணையில் தண்ணீர் இல்லை. அணையை தூர்வார ரூ.20 கோடி ஆகும். ஆனால் தமிழக அரசு அதை செய்ய வில்லை. தமிழகத்தில் நிர்வாகம் நடக்கவில்லை. விசாயத்துக்கு நீர் இல்லை. குடிக்க தண்ணீர் இல்லை. இது ஒருபுறமிருக்க அரசே நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டி உள்ளது.

கோவையில் 70 சதவீத கழிவு நீர் நொய்யல் ஆற்றில் விடப்படுகிறது. வருங்கால சந்ததியினருக்கு இயற் கை செல்வங்களை நாம் விட்டு செல்ல வேண்டும். அதை இந்த யாத்திரையில் மக்களுக்கும், அரசுக்கும் எடுத்து கூறுவோம். மாற்றத்துக்கு தமிழக மக்களை தயார்படுத்துவோம். கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க 5 நாட்கள் யாத்திரை நடத்தப்படுகிறது. யாத்திரை செல்லும் பாதைகளில் மரக்கன்றுகளை நடுகிறோம். இந்த யாத்திரை பா.ஜனதா கட்சிக்கு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும்.

10 லட்சம் பேரிடம் கையெழுத்து

பா.ஜனதா ஆட்சி நடக்கும் மாநிலங்களான குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் ஒரு காலத்தில் பாலைவனமாக இருந்தன. ஆனால் திறமையான பா.ஜனதா ஆட்சியால் அங்குள்ள நீர்நிலைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தில் கழகங்களின் ஆட்சியில் அனைத்து நீர்நிலைகளும் பாதிக்கப் பட்டு வறண்ட பகுதிகளாகி விட்டன. இந்த நிலை மாற வேண்டும். யாத்திரை செல்லும் இடங்களில் பொதுமக்களிடம் கையெழுத்துக்களை பெற்று வருகிறோம்.

5 நாள் யாத்திரையில் நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி மொத்தம் 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று அதை தமிழக முதல்–அமைச்சரிடம் அளிக்க உள்ளோம். பிரசார பயணத்தின் போது ஆங்காங்கே மரங்கள் நடுவதுடன், குளம் குட்டைகளை தூர்வாரும் பணிகளிலும் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னாள் மத்திய மந்திரி நெப்போலியன்

முன்னதாக யாத்திரையை முன்னாள் மத்தியமந்திரி நெப்போலியன் தொடங்கி வைத்து பேசும் போது, நீர் ஆதாரங்களை பராமரிக்காததால் இன்று கடும் வறட்சி நிலவுகிறது. குடிநீருக்கு பஞ்சம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு காரணம் ஆட்சியாளர்கள் தான். நீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும். இதற்கு மத்தியில் ஆளும் பா.ஜனதா துணை நிற்கும் என்றார்.

பின்னர் நெப்போலியன் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழகத்தில் நீர் ஆதாரங்களை மேம்படுத்த தேவையான நிதியை மாநில அரசு ஒதுக்க வேண்டும். மத்திய அரசிடம் தேவையான நிதியை கேட்டுப் பெற வேண்டும். மத்திய அரசிடம் நாங்களும் வலியுறுத்துவோம். இன்றைய சூழலில் தமிழக அரசின் செயல்பாடு சரியாக இல்லை. தி.மு.க. செயல் தலைவரின் செயல்பாடு குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., மா.சின்னராசு மற்றும் நிர்வாகிகள் மாதம்பட்டி தங்கவேல், வேலுமயில்சாமி, வக்கீல் ரங்கராஜ், ஜி.கே.எஸ்.செல்வகுமார், முத்துராமலிங்கம், மோகன்மந்த்ராசலம், செய்தி தொடர்பாளர் சபரிகிரிஷ், வி.கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பிரசார வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன

தாமரையின் தாகம் தீர்க்கும் யாத்திரை பூண்டியில் இருந்து புறப்பட்டது. அப்போது 50–க்கும் மேற்பட்ட வாகனங்களில் பா.ஜனதாவினர் சென்றனர். செம்மேடு என்ற பகுதியில் பிரசார வாகனங்கள் சென்ற போது போலீசார் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தினார்கள். பிரசார யாத்திரைக்கு அதிகபட்சமாக 2 வாகனங்களில் மட்டுமே செல்ல வேண்டும். மற்ற வாகனங்களுக்கு அனுமதியில்லை என்று கூறினார்கள். இதை ஏற்றுக் கொண்ட வானதி சீனிவாசன் மற்ற வாகனங்களை திரும்பி செல்லுமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி வானதி சீனிவாசனின் பிரசார வாகனம், மற்றொரு வாகனத்தை தவிர மற்ற வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

பூண்டியில் தொடங்கிய யாத்திரை தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, ஆனைமலை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்றது. நேற்று இரவு கவுண்டம்பாளையத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. தாகம் தீர்க்கும் யாத்திரை இன்றும்(சனிக்கிழமை) நடக்கிறது.


Next Story