திருச்சியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது மழை சாலைகளில் தண்ணீர் தேங்கியது, மரம் சாய்ந்தது


திருச்சியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது மழை சாலைகளில் தண்ணீர் தேங்கியது, மரம் சாய்ந்தது
x
தினத்தந்தி 10 March 2017 10:45 PM GMT (Updated: 2017-03-11T02:23:25+05:30)

திருச்சியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மரம் சாய்ந்தது.

திருச்சி,

திருச்சியில் நேற்று காலையில் இருந்தே வெயில் கொளுத்தியது. அக்னி நட்சத்திரத்திற்கு இணையாக அடித்த இந்த வெயிலால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீர் என வானத்தில் கருமேகங்கள் திரண்டன. சூறைக்காற்று பலமாக வீசியது. லேசாக மழை தூற ஆரம்பித்தது.

திருச்சியில் மழை

இரவு 8 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. இடி, மின்னலுடன் பெய்த இந்த மழையினால் திருச்சி நகரின் பல பகுதிகளில் சாலை ஓரங்களிலும், தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. மேலப்புதூர் சுங்க பாதையிலும், கண்டோன்மெண்ட் அய்யப்ப நகர் பகுதியிலும் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் நீந்தியபடியே சென்றன.

மரம் சாய்ந்தது

மழை பெய்தபோது காற்று பலமாக வீசியதால் பாலக்கரை தர்மநாதபுரம் தெருவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் இருந்த ஒரு பெரிய மரம் வேருடன் சாய்ந்தது. அந்த மரம் மின்சார வயர்கள் மீது சாய்ந்ததால் மின்சாரம் தடைபட்டது. இதனால் தர்மநாதபுரம், இருதயபுரம், அன்னைநகர், துரைசாமி புரம் பகுதிகளில் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. இதனால் இரவு முழுவதும் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

கோடை காலத்தின் தொடக்கத்தில் நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த இந்த மழையினால் புழுக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.Next Story