வடக்கு விஜயநாராயணம் அருகே மின்னல் தாக்கி ஆடு மேய்க்கும் தொழிலாளி சாவு பசு மாடும் பலியான பரிதாபம்


வடக்கு விஜயநாராயணம் அருகே மின்னல் தாக்கி ஆடு மேய்க்கும் தொழிலாளி சாவு பசு மாடும் பலியான பரிதாபம்
x
தினத்தந்தி 11 March 2017 8:00 PM GMT (Updated: 2017-03-11T16:53:42+05:30)

வடக்கு விஜயநாராயணம் அருகே மின்னல் தாக்கி ஆடு மேய்க்கும் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மேலும் மின்னலுக்கு பசு மாடும் பரிதாபமாக உயிரிழந்தது.

இட்டமொழி,

வடக்கு விஜயநாராயணம் அருகே மின்னல் தாக்கி ஆடு மேய்க்கும் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மேலும் மின்னலுக்கு பசு மாடும் பரிதாபமாக உயிரிழந்தது.

ஆடு மேய்க்கும் தொழிலாளி

நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த வடக்கு விஜயநாராயணம் அருகே உள்ள வெங்கட்ராமபுரத்தை சேர்ந்தவர் சுப்பையா. அவருடைய மகன் நம்பி (வயது 36). ஆடு மேய்க்கும் தொழிலாளி. நேற்று வழக்கம் போல வடக்கு விஜயநாராயணம் குளத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். மதிய வேளையில் வெயில் குறைந்து வானம் இருண்டது. சற்று நேரத்தில் இடி–மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் நம்பி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் அவரது உறவினர்கள், வடக்கு விஜயநாராயணம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்–இன்ஸ்பெக்டர்கள் வேலம்மாள், சுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் பொன்னுச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு கிடந்த நம்பியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நம்பிக்கு ஆறுமுகம் (33) என்ற மனைவியும், சிவநந்தினி (9), முத்துசுதா (7) ஆகிய மகள்களும் உள்ளனர்.

பசு மாடு சாவு

இதே போல் மற்றொரு பகுதியில் மின்னல் தாக்கி பசு மாடும் பலியான சம்பவமும் நிகழ்ந்துள்ளது. வடக்கு விஜயநாராயணம் அருகே உள்ள கடையன்குளத்தை சேர்ந்தவர் ராமன் (45) விவசாயி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சினையுடன் கூடிய பசு மாடு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். நேற்று மதியம் வடலிவிளை செல்லும் ரோட்டில் உள்ள வயல் பகுதியில், அந்த பசு மாடு மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது இடி–மின்னலுடன் பலத்த மழை பெய்ததில், மின்னல் தாக்கி பசு மாடு பரிதாபமாக இறந்தது.

Next Story