வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் இருந்து ரே‌ஷன்கார்டுதாரர்களின் பெயரை நீக்கியது குறித்து விசாரிக்க அதிகாரிகள் நியமனம்


வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் இருந்து ரே‌ஷன்கார்டுதாரர்களின் பெயரை நீக்கியது குறித்து விசாரிக்க அதிகாரிகள் நியமனம்
x
தினத்தந்தி 11 March 2017 10:45 PM GMT (Updated: 11 March 2017 1:14 PM GMT)

வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் இருந்து ரே‌ஷன்கார்டுதாரர்களின் பெயரை நீக்கியது

சிவகங்கை, .

முன்னுரிமை ரே‌ஷன்கார்டு

சிவகங்கை மாவட்டத்தில் கிராம பகுதிகளில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோரின் பெயர் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் இருந்து வந்தது. அவர்களது ரே‌ஷன்கார்டு முன்னுரிமை உள்ள ரே‌ஷன்கார்டாக பதிவு செய்யப்பட்டு ரே‌ஷன் கடையில் விலையில்லா அரிசி கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது. அதாவது பச்சை கலர் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு கார்டுக்கு 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. பச்சை கலர் கார்டு வைத்திருப்பவர்களின் குடும்பத்தில் 4 பேருக்கு மேல் இருந்தால் ஒருவருக்கு தலா 5 கிலோ வீதம் கூடுதலாக விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது.

தற்போது மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பெரும்பாலான ரே‌ஷன்கார்டுகள் முன்னுரிமையற்ற ரே‌ஷன்கார்டுகளாக மாற்றபட்டன. இதனால், ஏற்கனவே ரே‌ஷன் கடைகளில் கூடுதலாக பெற்று வந்த விலையில்லா அரிசி வழங்கப்படாது என்ற தகவல் பரவியது.

43 அதிகாரிகள் நியமனம்

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கிய போது, உண்மையிலேயே வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளோரின் பெயர் நீக்கப்பட்டு விட்டதாக பலர் குற்றம் சாட்டினர். இதுசம்பந்தமாக வாரம்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் ஏராளமானோர் மனு கொடுத்து வருகின்றனர்.

இதைதொடர்ந்து மாவட்ட கலெக்டர் மலர்விழி, இதுசம்பந்தமாக அதிகாரிகள் நேரில் சென்று உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இதற்காக மாவட்டம் முழுவதும் தாசில்தார் அந்தஸ்தில் உள்ள 43 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் புகார் தெரிவித்துள்ள கிராமங்களுக்கு நேரில் சென்று உண்மையிலேயே வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோரின் பெயர் அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதா என்று விசாரணை நடத்துகின்றனர்.

விசாரணையில் உண்மையிலேயே வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளோரின் பெயர் அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருந்தால் அதை ரத்து செய்யவும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story