மின் கம்பத்தில் தூக்குமாட்டி போராட்டம் ராஜபாளையத்தில் பரபரப்பு


மின் கம்பத்தில் தூக்குமாட்டி போராட்டம் ராஜபாளையத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 11 March 2017 10:30 PM GMT (Updated: 2017-03-11T19:04:19+05:30)

ராஜபாளையத்தில் சாலையை ஓட்டி உள்ள மின் கம்பத்தில் கார் மோதியதில்

ராஜபாளையம்,

மின்கம்பம்

ராஜபாளையத்தில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சு மார்க்கெட் பகுதியில் சாலையை ஓட்டி உள்ள மின்கம்பத்தில் வாகனங்கள் மோதி தொடர்ந்து விபத்து நடந்து வருகிறது. எனவே மாற்று இடத்தில் மின்கம்பங்களை நட வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த யோகேஸ்வரன், கதிர், அர்ஜுன் ஆகிய 3 வாலிபர்கள் நேற்று முன்தினம் சிவகாசியில் நடைபெற்ற நண்பரின் திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு இரவு காரில் குற்றாலம்புறப்பட்டனர்.

ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியை கடந்து சென்று கொண்டிருந்தகார் எதிர்பாராத விதமாக சாலையை ஓட்டி இருந்த மின் கம்பங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் இரு மின்கம்பங்கள் உடைந்து காரின் மேல் விழுந்தன. விபத்தில் 3 பேரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.

போராட்டம்

இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையின் மேல் அமைந்துள்ள மின் கம்பங்களை இடம் மாற்றக் கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள சமூக ஆர்வலர் ராமராஜ், அவரது நண்பர் கணேஷ் ஆகியோர் இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் அங்கு விரைந்து வந்தனர். உடைந்த காரின் மேல் இருந்த மின் கம்பங்களின் மீது தூக்கு மாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 11–தேதி, இதே இடத்தில் சாலை மேல் இருந்த மின் கம்பத்தில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் காயமடைந்தார். மின்கம்பம் சேதமானது. மீண்டும் அதே இடத்தில் மின் கம்பங்களை மின் வாரிய துறையினர் அமைக்க கூடாது என ராமராஜ் எதிர்ப்பு தெரிவித்தார். வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்படும் என்று கூறிய மின் வாரிய அதிகாரிகள் சில நாட்களுக்கு பின்பு மீண்டும் அதே இடத்தில் மின் கம்பங்களை அமைத்துவிட்டனர். சேதமான கம்பங்களை அகற்றிய பின்னர், அதே இடத்தில் மாற்று கம்பங்களை நிறுவினால் மீண்டும் விபத்து நடக்க வாய்ப்பு உள்ளதால், கம்பங்களை இடம் மாற்றக் கோரி போராட்டம் நடத்துவதாக ராமராஜ் தெரிவித்தார். அதிகாலையில் நடந்த இந்த நூதன போராட்டத்தால் அந்தபகுதியில பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட இருவரிடமும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மின் கம்பங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்ற அதிகாரிகள் உறுதி கூறியதை அடுத்து இருவரும் போராட்டத்தை கை விட்டனர். பின்னர் சேதமான மின் கம்பங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டடன.


Next Story