தர்மபுரி மாவட்டத்தில் நீர்சேகரிப்பு திட்டங்களை செயல்படுத்தாவிட்டால் இளைஞர்களை ஒருங்கிணைத்து போராட்டம் கருத்துகேட்பு கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேச்சு


தர்மபுரி மாவட்டத்தில் நீர்சேகரிப்பு திட்டங்களை செயல்படுத்தாவிட்டால் இளைஞர்களை ஒருங்கிணைத்து போராட்டம் கருத்துகேட்பு கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 11 March 2017 11:00 PM GMT (Updated: 11 March 2017 4:36 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் நீர்சேகரிப்பு திட்டங்களை செயல்படுத்தாவிட்டால் இளைஞர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும்

மொரப்பூர்,

கருத்துகேட்பு கூட்டம்

தர்மபுரி மாவட்டம் வெலாம்பட்டி அருகே தென்பெண்ணை ஆறு ஓடுகிறது. இந்த பகுதியில் செனக்கல் என்ற இடத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று செனக்கல் பகுதிக்கு நேரில் சென்று தடுப்பணை கட்டும் திட்டம் தொடர்பாக பார்வையிட்டார்.

பின்னர் அங்கு திரண்டிருந்த விவசாயிகளிடம் இந்த திட்டம் குறித்த கருத்துக்களை அவர் கேட்டறிந்தார். அப்போது விவசாயிகள் செனக்கல் தடுப்பணை திட்டம் செயல்படுத்தப்பட்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கருத்து தெரிவித்தனர். சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் திரண்டு வந்து கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர்.

இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியதாவது:–

போராட்டம்

தமிழகத்தில் காமராஜர், எம்.ஜி.ஆர். ஆகிய 2 பேரின் ஆட்சிக்காலத்தில் மட்டுமே நீர் சேகரிப்பு திட்டங்கள், தடுப்பணைகள் கட்டப்பட்டன. அதற்கு பின் நடந்த தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளில் தமிழகத்தின் நீராதாரத்தை மேம்படுத்துவதற்கான எந்தவித திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. பல்வேறு வகையான இலவச பொருட்களை கொடுத்து மக்களை ஆட்சியாளர்கள் ஏமாற்றி வருகிறார்கள். கிருஷ்ணகிரி அணையில் இருந்து வலதுபுற கால்வாயை திப்பம்பட்டி, சின்னகவுண்டம்பட்டி, கம்பைநல்லூர் வழியாக மொரப்பூர் வரை நீட்டிப்பு செய்தால் இந்த சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்களை நிரப்ப முடியும். அந்த நீராதாரத்தை கொண்டு இந்த பகுதியில் விவசாயத்தை செழிக்க வைக்க முடியும்.

தர்மபுரி மாவட்டத்திற்கு தேவையான 10 முக்கிய நீர் சேகரிப்பு திட்டங்களை செயல்படுத்த ரூ.200 கோடி நிதி ஒதுக்கினால் போதும். செனக்கல் அணை திட்டத்தை நிறைவேற்றினால் 28 ஊராட்சிகளில் உள்ள 50 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். தர்மபுரி மாவட்டத்தில் நீராதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் வேலைவாய்ப்பு, விவசாயம் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. எனவே செனக்கல் தடுப்பணை திட்டம் உள்பட தர்மபுரி மாவட்டத்திற்கு தேவையான நீர்சேகரிப்பு திட்டங்களை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் இளைஞர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் சாந்தமூர்த்தி, மாவட்ட செயலாளர் இமயவர்மன், சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ., மாநில நிர்வாகிகள் வேலுச்சாமி, வணங்காமுடி, அரசாங்கம், மதியழகன், சத்தியமூர்த்தி, முரளி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.


Next Story