தேனி நகராட்சி பகுதியில் 3 கடைகளுக்கு சீல் வைப்பு; 42 குடிநீர் குழாய்கள் துண்டிப்பு


தேனி நகராட்சி பகுதியில் 3 கடைகளுக்கு சீல் வைப்பு; 42 குடிநீர் குழாய்கள் துண்டிப்பு
x
தினத்தந்தி 11 March 2017 10:30 PM GMT (Updated: 11 March 2017 7:20 PM GMT)

தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் குத்தகை பணம் செலுத்தாத 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. வரி செலுத்தாததால் 42 குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

தேனி,

தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வரி, சொத்து வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு குத்தகை தொகை, வாடகை வசூல் செய்யப்படுகிறது. இந்த வரி மற்றும் வாடகை மூலம் கிடைக்கும் வருவாயை வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும். எனவே வரி, வாடகை வசூல் செய்யும் பணியில் நகராட்சி நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

சொத்து வரியை பொறுத்தவரை இதுவரை சுமார் 79 சதவீதம் பேர் வரி செலுத்தி விட்டனர். இதன் மதிப்பு ரூ.2 கோடியே 73 லட்சம் ஆகும். குடிநீர் வரியை 52 சதவீதம் பேர் செலுத்தியுள்ளனர். இதன் மதிப்பு ரூ.42 லட்சம் ஆகும். அதேபோன்று பஸ் நிலையம், வணிக வளாகங்களில் வாடகை, குத்தகை பணம் சுமார் 60 சதவீதம் வசூலாகி உள்ளது. இதன் மதிப்பு ரூ.1 கோடியே 22 லட்சம் ஆகும். வரி மற்றும் வாடகை என இந்த நிதியாண்டுக்கு இதுவரை சுமார் ரூ.4 கோடியே 17 லட்சம் நகராட்சிக்கு வருவாயாக கிடைத்து உள்ளது.

மேலும், நகராட்சி பகுதிகளில் தற்போதைய நிலையில் வரி பாக்கியை பொறுத்தவரை சொத்து வரி சுமார் ரூ.62 லட்சம், குடிநீர் வரி ரூ.27 லட்சம், கடைகளுக்கான குத்தகை, வாடகை தொகை சுமார் ரூ.1 கோடி அளவில் பாக்கி உள்ளது. இதையடுத்து வரிசெலுத்தாதவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடைகளுக்கு சீல் வைப்பு

அந்த வகையில் கர்னல் ஜான்பென்னி குயிக் பஸ் நிலையத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் குத்தகை பணம் செலுத்தாமல் இருந்த காரணத்திற்காக 3 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் சீல் வைத்தனர். இந்த அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து சம்பந்தப்பட்ட குத்தகைதாரர்கள் உரிய தொகையை நகராட்சி அலுவலகத்தில் செலுத்தினர். இதையடுத்து அந்த கடைகளை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதேபோன்று நகராட்சி பகுதிகளில் குடிநீர் வரி செலுத்தாத காரணத்தால் 42 குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. இந்த மாத இறுதிக்குள் அனைத்து வரி பாக்கிகளையும் வசூல் செய்ய நகராட்சி அலுவலர்கள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக வார்டு பகுதிகளில் ஆட்டோக்களில் ஒலிபெருக்கிகள் கட்டி, அறிவிப்புகளும் செய்யப்பட்டு வருகின்றன. இத்தகவல்களை நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story