பழனி அருகே தென்னை மரங்களை முறித்து நாசப்படுத்திய காட்டுயானைகள்


பழனி அருகே தென்னை மரங்களை முறித்து நாசப்படுத்திய காட்டுயானைகள்
x
தினத்தந்தி 11 March 2017 10:00 PM GMT (Updated: 2017-03-12T01:09:02+05:30)

தண்ணீர் குடிக்க வரும் காட்டுயானைகள் அருகில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி செல்கின்றன.

நெய்க்காரப்பட்டி,

பழனி வனப்பகுதியில் மான், காட்டெருமை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக வனவிலங்குகள் அடிக்கடி பாலாறு–பொருந்தலாறு அணைக்கு தண்ணீர் குடிக்க வருகிறது. சமீபகாலமாக தண்ணீர் குடிக்க வரும் காட்டுயானைகள் அருகில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி செல்கின்றன.

நேற்று முன்தினம் இரவும் குட்டிகளுடன் காட்டுயானைகள் கூட்டமாக பாலாறு–பொருந்தலாறு அணைப்பகுதி அருகே உள்ள புளியம்பட்டி பகுதியில் மகுடீஸ்வரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்துக்குள் புகுந்தன. பின்னர் அவை தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களை முறித்து சேதப்படுத்தின. மேலும் தென்னை மரங்கள் வேரோடு பிடுங்கி எறிந்தன.

நடவடிக்கை

இரவு முழுவதும் அங்கு முகாமிட்டிருந்த அவை நேற்று அதிகாலை நேரத்தில் வனப்பகுதிக்குள் சென்றன. தோட்டத்துக்கு சென்ற மகுடீஸ்வரன், தென்னை மரங்களை காட்டுயானைகள் சேதப்படுத்தியிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சேதமடைந்த தென்னை மரங்களை பார்வையிட்டனர்.

காட்டுயானைகள் தொடர் அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, காட்டுயானைகள் தோட்டங்களுக்குள் புகாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வன அலுவலர் கணேஷ்ராம் கூறும்போது, ‘வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் காட்டுயானைகள் தோட்டங்களுக்குள் புகுந்து வருகின்றன. எனவே யானைகள் தோட்டங்களுக்குள் புகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சேதமடைந்த தென்னை மரங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்’ என்றார்.


Next Story